வெளியிடப்பட்ட நேரம்: 01:15 (07/12/2017)

கடைசி தொடர்பு:07:37 (07/12/2017)

ஏற்காட்டை தாயகமாக கொண்ட அரிய வகை பல்லி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

''உலகத்திலேயே சேலம் மாவட்டம் ஏற்காட்டை தாயகமாகக் கொண்டு வாழ்ந்துவரும் அரிய வகை பல்லி உள்ளது. இந்தப் பல்லி ஏற்காட்டை தாயகமாக கொண்டுள்ளதால் இதற்கு `ஏற்காடு பல்லி' என்று அழைக்கப்படுகிறது. இதன் விலங்கியல் பெயர் கூட நீமாஸ்பைஸ் ஏற்காடியன்ஸ்'' என்கிறார் அறிவியல் எழுத்தாளர் இளங்கோ.

இந்த சுவாரஸ்யமான விஷயம்குறித்து இளங்கோ தொடர்ந்து விவரித்தார், ''பொதுவாக பல்லிகள் நமக்கு நன்மை செய்யும் பிராணியாகும். இது கொசு, பூச்சிகள், பூராண், கரப்பான் பூச்சி, தேள் ஆகியவற்றைப் பிடித்து உண்ணுகிறது. இது மிகவும் சாதுவான விலங்காகும். இதனால் நமக்கு எந்த தீங்கும் ஏற்படாது. அது நம்மை கடித்தால் நமக்கு ஏதுவும் ஆகாது. ஏனென்றால் அதன் உடம்பில் விஷம் கிடையாது. பல்லி விழுந்த உணவை சாப்பிட்டாலும் ஒன்றும் ஆகாது. ஆனால், இதைப் பற்றிய பொய்யான தகவலைத் தொடர்ந்து பரப்பி வந்ததால் பல்லி விழுந்த உணவு எனக் கூறியவுடன் வாந்தி எடுக்கின்றனர். ஏதோ சிலருக்கு மட்டுமே ஒவ்வாமை ஏற்படலாம். பல்லிகள் தண்ணீர் குடிக்காது. உண்ணும் பூச்சிகளில் இருந்தே தண்ணீர் பெறுகிறது. இதன் சிறுநீர் சற்று கெட்டியாக இருக்கும். பல்லிக்கு 100 பற்கள் உண்டு. பற்கள் விழுந்தால் 3 அல்லது 4 மாதத்தில் புது பற்கள் முளைக்கும். பற்கள் விழுந்த இடத்தை நோக்கி வளர்ந்த பற்கள் நகரும் தன்மை உடையது. பல்லிக்கு 4 கால்களும், 5 விரல்களும் உண்டு. கால்கள் வலுவில்லாதவை. அதனால் உடலை தூக்கி நடக்க முடியாது. சுவற்றில் தரையில் ஒட்டியே இயங்கும். தனக்கு ஆபத்து நேரும் பட்சத்தில் வாலினை துண்டித்துவிட்டு தப்பிச் செல்லும். வால் மீண்டும் வளரும்.

இப்படிப்பட்ட சிறப்புகள் கொண்ட உயிரினமான பல்லியின் வகை ஒன்று ஏற்காட்டை மட்டுமே பூர்வீகமாகக்கொண்டு வாழ்ந்துவருகிறது. இந்தப் பல்லியை 2000-ம் ஆண்டில் தாஸ் மற்றும் பாயர் ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர். இந்த பல்லியானது முதன் முதலாக சேர்வராயன் மலையில் ஏர்காடு டவுன் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அதற்கு ஏற்காடு முழுநாள் பள்ளி (YERCAUD DAY GECKO) எனப் பெயரிட்டனர். கடல் மட்டத்தில் இருந்து 1,100 முதல் 1,500 மீட்டர் உயரத்தில் ஏற்காடு மலைப்பகுதியில் இந்தப் பல்லி  காணப்படுகிறது. பாறைகளிலும், மனிதர் வாழும் பகுதிகளிலும் இவை வாழ்கின்றன. இது ஒரு சிறு பல்லி. அமெரிக்கன் பிங்க் எனப்படும் அடர்ந்த செம்பழுப்பு நிறத்தில் உள்ளது. இதன் நிறம் புதுமையானதாகவும், பார்ப்பதற்கு விநோதமாகவும் உள்ளது. இதன் உடலில் பல்வேறு சிறு, சிறு திட்டுகள் வண்ணத்துடன் உள்ளது. அடந்த நிறமும், வெளிறிய நிறமும் கொண்டுள்ளது. இதனை இரவு மற்றும் பகல் நேரங்களும் காணலாம். இது 3 முதல் 6 செ.மீ., நீளமுடையது. இந்தப் பல்லி உலக அளவில் முதன் முதலாக ஏற்காட்டில் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்ற காரணத்தால் அதற்கு `ஏற்காடு பல்லி' என்று பெயர் கிடைத்துள்ளது. இது ஒரு அரிய வகை பல்லியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2015 ஆண்டுகளில் கொல்லிமலை மற்றும் கல்வராயன் மலை ஆகியவற்றிலும் இது இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் சாதுவான பல்லி. நமது கையை இதன் அருகில் கொண்டுசென்றால் பயப்படாமல் மெதுவாக ஒடுகிறது. ஏற்காட்டை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்துவரும் அரிய வகைப் பல்லியான இந்தப் பல்லியை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்'' என்று முடித்தார்.