வெளியிடப்பட்ட நேரம்: 01:45 (07/12/2017)

கடைசி தொடர்பு:18:09 (30/06/2018)

"பொதுக்கழிப்பிடம் இல்லாததால்தான் பள்ளிக்கூடத்து பக்கத்துல ஒதுங்குறோம்!" - புலம்பும் வெள்ளியணை மக்கள்!

 

"எங்களுக்கு என்ன பிள்ளைங்க படிக்கிற பள்ளிக்கூடத்து பக்கத்துல அசிங்கம் பண்ணனும்ன்னு ஆசையா என்ன? எங்க வீடுகள்லயும் டாய்லெட் கிடையாது. திறந்தவெளியா போறதுக்கு, அந்த இடம்தான் தோதா இருக்கு. அதான் அங்க நம்பர் டூ பாத்ரூம் போறாங்க மக்கள். பொதுக்கழிப்பிடம் கட்டிக் கொடுத்தா, நாங்க ஏன் அங்க போகப் போறோம்?!" என்று ஆதங்கமாக பேசுகிறார்கள் வெள்ளியணை கிராம மக்கள்.
 

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது வெள்ளியணை. இந்தக் கிராமத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி காம்பவுண்டு சுவரை ஒட்டியும், சாலை ஓரமாக இருபக்கமும் மக்கள், இரவு நேரங்களில், அதிகாலையில் அவசரத்துக்கு ஒதுங்க, பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவிகள் வகுப்பறைகளில் மூக்கைப் பொத்தியபடி பாடம் படிக்க வேண்டிய சூழல். பள்ளி தரப்பில் இருந்து அந்தப் பகுதி மக்களிடம் போய் சொல்ல, 'வேற இடம் இல்லாமல்தான் அங்க போறோம்' என்று கண்ணீர் விட்டிருக்கிறார்கள். இதனால், பள்ளி சார்பாக அந்த இடத்தில் முற்களை வெட்டிப் போட்டு தடுப்பு செய்திருக்கிறார்கள். ஆனாலும், அந்த இடத்தில்தான் பொதுமக்கள் அவசரத்துக்குப் போய்வருகிறார்கள். 


 

இதுபற்றி அந்தப் பகுதி மக்களிடம் கேட்டோம். "எங்க பிள்ளைங்கதான் இந்தப் பள்ளியில் படிக்குதுங்க. அப்படி இருக்க, பள்ளிக்கூடம் அருகில் அவசரத்துக்குப் போகுறதுக்கு எங்களுக்கு ஆசையா என்ன? எங்களுக்கு அந்த இடத்தை விட்டா மாற்று இடம் கிடையாது. 'அந்த இடத்தில் பொது டாய்லெட் கட்டித் தாங்க'ன்னு பல அதிகாரிகள்கிட்ட கேட்டுப் பார்த்துட்டோம். பி.டி.ஓ கிட்ட மனு கொடுத்தோம். அவர் ஏதோ டாய்லெட் கட்டுற மாதிரியே வந்து அளந்தெல்லாம் பார்த்தார். ஆனால், கிணத்தில் போட்ட கல்லாட்டம் அந்த விஷயத்தை போட்டுட்டார். இங்க டெங்குக் கொசு தடுப்புப் பணிகளைச் செய்ய அதிகாரிகள் வந்தாங்க. அவர்களிடம் இங்க பொது டாய்லெட்டை கட்டித் தர கேட்டதுக்கு, 'அத உங்க பஞ்சாயத்துல போய் கேட்டுக்குங்க'ன்னு மழுப்பிட்டு போயிட்டாங்க. மாவட்ட கலெக்டர்தான் எங்க பிரச்னையை புரிஞ்சுகிட்டு, அந்த இடத்துல பொது டாய்லெட் கட்டித் தந்து எங்க அல்லலை தீர்க்கணும். இல்லைன்னா, அந்த இடத்துல நாங்க அவசரத்துக்கு ஒதுங்குறதைத் தவிர வேற வழியில்லை" என்றார்கள் பாவமாக!