வெளியிடப்பட்ட நேரம்: 06:15 (07/12/2017)

கடைசி தொடர்பு:16:08 (12/07/2018)

"மொழியை நம் விழிபோல் காக்க வேண்டும்!" - கரூர் ஆட்சியர் வலியுறுத்தல்!

 

 

"நம் விழிபோல் மொழியைக் காக்க வேண்டும்" என கரூரில் நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், தாந்தோணி அரசு கலைக் கல்லூரியின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் பங்கேற்று விழாப் பேருரையாற்றி, சிறந்த தமிழ் மொழி செயலாக்கம் செய்த மாவட்ட நிலை அலுவலர்களுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்களை வழங்கியதோடு, தமிழ் அம்மா மென்பொருள் சொல்லாக்கம் குறுந்தகட்டையும் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில்,  "5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் குடிமக்களின் தாய்மொழியான தமிழ்மொழியை அரசு அலுவலகங்களில் செயலாக்க மொழியாகவும், கோப்புகளைக் கையாள்வதில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், ஆண்டுதோறும் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்ப்பில் அனைத்து மாவட்ட ஆட்சியரகங்களிலும் ஆட்சிமொழி பயிலங்கரம் நடத்தப்பட்டுவருகிறது. உணர்விலும், உடலிலும் கலந்தவிட்ட தமிழ்மொழியின் மாண்பை உலகம் அறியச்  செய்யவும், எதிர்கால சந்ததியினருக்கு தமிழ்மொழியின் தொன்மையை எடுத்துரைக்கவும், நாம் ஒவ்வொருவரும் முற்பட வேண்டும். உணர்வை உள்ளபடியே வெளிப்படுத்தக்கூடிய ஒரு உன்னத மொழியாம் தமிழ்மொழியை உணர்ந்து, ரசித்துப் பேசவேண்டும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாலும், பதினெண் மேல்கணக்கு நூல்களாலும் மனித வாழ்வில் அகம், புறம் எனப் பிரித்துக்காட்டக்கூடிய ஒப்பற்ற இலக்கண, இலக்கியச் செறிவுகளைக்கொண்ட உன்னத மொழியின் மாண்பை ஒவ்வொருவரும் உணர்ந்து, மொழி காக்க வேண்டும். இதற்கு, ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.