வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (07/12/2017)

கடைசி தொடர்பு:16:18 (23/07/2018)

"எங்களுக்கு மணல் அள்ள அனுமதி தரலன்னா நாண்டுகிட்டு சாவோம்!" - கலெக்டர் அலுவலகம் முன்பு குமுறிய மாட்டுவண்டி உரிமையாளர்கள்!

 

"ஒரு வாரமா எங்களை மணல் அள்ள விடலை. இந்த நிலை தொடர்ந்தா, நாங்க அனைவரும் குடும்பம் குடும்பமா நாண்டுகிட்டு சாக வேண்டியதுதான்!" என்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காவல்துறையிடம் பொங்கித் தீர்த்தனர், நூற்றுக்கணக்கான மாட்டு வண்டி உரிமையாளர்கள்.

'தேங்கி நிற்கும் கட்டுமானப் பணிகளைச் சரிபண்ண, தமிழகம் முழுக்க 70 மணல் குவாரிகள் திறக்கப்படும்" என்று சில நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், மதுரை உயர் நீதிமன்றக் கிளையோ, 'இனி எந்த மணல் குவாரியையும் திறக்கக் கூடாது. ஜல்லியைத் தவிர்த்து, அனைத்து விதமான குவாரிகளையும் உடனே அரசு மூட வேண்டும்" என்று கண்டிப்பான உத்தரவைப் போட்டு, தமிழக அரசை விதிர்விதிர்க்கவைத்திருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுக்க கட்டுமானப் பணிகள் பாதியில் நிற்கின்றன. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி உள்ளிட்ட ஆறுகளில் மாட்டுவண்டிகள்மூலம் மணல் அள்ளிவந்த நூற்றுக்கணக்கானவர்களை, 'இனி மணல் அள்ளக்கூடாது' என்று மாவட்ட நிர்வவாகமும் காவல்துறையும் கெடுபிடிசெய்ய, கொதித்தெ ழுந்த மாட்டுவண்டிக்காரர்கள்,  கடந்த சில நாள்களாகப் பல்வேறு விதமான போராட்டங்களைச் செய்துவருகிறார்கள். 


 

 

 'மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்' என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்த, நூற்றுக்கணக்கான மாட்டுவண்டி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றனர். ஆனால், அவர்களை மடக்கிப்பிடித்த கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜா தலைமையிலான போலீஸார், அனைவரையும் கொண்டுபோய், வி.கே.டி திருமண மண்டபத்தில் அடைத்துவைத்தனர். அதற்குள், விஷயத்தைக் கேள்விப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள், மண்டபத்தின் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதனால், அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு நடந்தது. "பொக்லைன் வச்சு, லாரியிலதான் மணல் அள்ள வேண்டாம்ன்னு கோர்ட் சொல்லி இருக்கு. மாட்டு வண்டிகள்ல மணல் அள்ளலாம்ன்னு நிரந்தரமா அனுமதி இருக்கு. ஆனா, எங்களை அள்ளவிடாம செஞ்சு, எங்க பொழப்புல மண்ணை அள்ளிப் போட்டுட்டீங்க. நாங்க கலெக்டரைப் பார்த்துப் பேசணும்" என்று கூட்டம் ஆர்ப்பரிக்க, "ஏழு பேர் மட்டும் நாளைக்கு வாங்க. கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்துவார்" என்று கும்மராஜா கூறினார். "எங்களுக்கு மணல் அள்ள அனுமதி தரலன்னா, குடும்பம் குடும்பமா தற்கொலை பண்ணிக்கவேண்டியதுதான்" என்று காவல்துறையிடம் சோகராகம் பாடினர்.