வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (07/12/2017)

கடைசி தொடர்பு:12:46 (04/07/2018)

"பொதுமக்களை ஏமாற்றும் பன்னாட்டு பால் நிறுவனம்மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?" - பால் முகவர்கள் சங்கம் கேள்வி!

"ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த இந்தியாவின் சுதேசி பால் நிறுவனமான "திருமலா பால்" நிறுவனத்தைப் பன்னாட்டு பால் நிறுவனமான "லீ லாக்டாலிஸ் நிறுவனம்" வாங்கிய பிறகு, பொதுமக்களையும் பால் முகவர்களையும் ஏமாற்றுகின்ற செயலையே தொடர்ந்து செய்துவருகிறது. அந்த நிறுவனத்தின்மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?" என்று  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுசம்பந்தமாக, அந்த சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுச்சாமியிடம் பேசினோம்.
 ''லீ லாக்டாஸ் நிறுவனம், ஏற்கெனவே கொழுப்புச் சத்து செரிவூட்டப்பட்ட(full cream milk - fat 6.0% - SNF 9.0%) 1 லிட்டர் பாலை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக (MRP) 54.00 ரூபாய்க்கும் மற்றும் சமன்படுத்தப்பட்ட பால் (standardised milk 4.5% - SNF 8.5%) 1 லிட்டர் பாலை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக (MRP) 50.00 ரூபாய்க்கும் விநியோகம் செய்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், தற்போது அந்நிறுவனம் அதே வகை பாலை 'family special' எனும் பெயரில் மட்டும் சிறு மாற்றம் செய்து,  கொழுப்புச் சத்து செரிவூட்டப்பட்ட (full cream milk - fat 6.0% - SNF 9.0%) 1 லிட்டர் பாலை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக (MRP) 50.00 ரூபாய்க்கும் மற்றும் சமன்படுத்தப்பட்ட பால் (standardised milk 4.5% - SNF 8.5%) 1 லிட்டர் பாலை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக (MRP) 46.00 ரூபாய்க்கும் தங்கள் நிறுவனத்தின் பாலகத்தை (parlour) நடத்தும் பால் முகவர்களுக்கு மட்டும் விநியோகம் செய்துவருவதோடு, பொது பால் முகவர்களுக்கு விநியோகம் செய்ய மறுத்துவருகிறது. இதன் காரணமாக, பால் முகவர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்திவருவதோடு, முறையற்ற வணிகத்தையும் லீ லாக்டாலிஸ் திருமலா நிறுவனம் மேற்கொண்டுவருகிறது. 


மேலும், சம்பந்தப்பட்ட பன்னாட்டு நிறுவனம் ஒரே வகையான, அதே தரம் கொண்ட பாலை பெயரில் மட்டும் சிறு மாற்றம் செய்து இரண்டு விலைகளில் விநியோகம் செய்வதால்,  சில்லறை வணிகர்கள், தேனீர்க் கடை, உணவக உரிமையாளர்கள் மத்தியில் பால் முகவர்கள்தான் தங்களை ஏமாற்றுகிறார்கள் என்கிற தவறான எண்ணத்தை விதைக்கின்ற செயலையும் அந்நிறுவனம் செய்துவருகிறது. எனவே, முறையற்ற வணிகத்தைச் செய்து பொதுமக்களையும், பால் முகவர்களையும் ஏமாற்றுகின்ற செயலை செய்துவரும் லீ லாக்டாலிஸ் நிறுவனம், தனது செயல்பாடுகளை உடனடியாக வரன்முறைபடுத்தி, பாலகம் நடத்துகின்ற பால் முகவர்கள் மற்றும் பொது பால் முகவர்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதைக் கைவிட வேண்டும். மேலும், ' இந்த விவகாரத்தில் பொதுமக்கள் நலன் சார்ந்து, தமிழக பால்வளத்துறையும்  தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்த வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்"  என்றார்.