வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (07/12/2017)

கடைசி தொடர்பு:07:55 (07/12/2017)

'லாரி லாரியா கடத்துறவங்களை விட்டுட்டு எங்களைப் பிடிக்கிறாங்க!' - மாட்டுவண்டிமூலம் மணல் அள்ளியவர்கள் கதறல்


புதுக்கோட்டை மாவட்டம், மழையூா் அக்னியாற்றில் மணல் அள்ளிவந்த மூன்று மாட்டுவண்டிகளைப் பறிமுதல்செய்து, சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்துக்காக மூன்று நபர்களைக் கைதுசெய்திருக்கிறார், மழையூா் காவல் உதவி ஆய்வாளா் சரவணன்.


இதுபோன்ற கைது நடவடிக்கைகள் அடிக்கடி இந்தப் பகுதியில் வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். ஆனால், இந்தமுறை கைது செய்யப்பட்டவர்கள் மூன்று பேருமே, தங்களைக் கைதுசெய்த உதவி ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்.

இத்தனை நாள்களாகக் கண்டும் காணாமலும் இருந்த போலீஸார், இப்போது திடீரென வேகமெடுத்து மாட்டுவண்டியில் மணலெடுப்பவர்களைக் கைதுசெய்வதில் தீவிரம் காட்ட என்ன காரணம்? விசாரித்தோம்.

"தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் அரசு அங்கீகாரம் பெற்ற மணல் குவாரிகளை எதிர்கால சந்ததியினர் நலன் கருதி, இழுத்து மூடும்படி உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. அனுமதிக்கப்பட்ட யூனிட் அளவைக் காட்டிலும் மிகவும் அதிகமாக மணலை அள்ளிப் பணம் பண்ணிய, மணல் மாஃபியாக்களுக்கு இந்த உத்தரவு பேரிடியாக விழுந்தது. உடனடியாக மாற்றுவழியை யோசித்தவர்கள், மாட்டுவண்டி ஃபார்முலாவைக் கடைப்பிடிக்க முடிவெடுத்துவிட்டார்கள்" என்கின்றனர், மழையூர் மணல் மாஃபியா நெட்வொர்க்கை நன்கு அறிந்தவர்கள்.

 இதுகுறித்து காவல்துறையினர், "இந்தப் பகுதியில் மாட்டுவண்டிகள் மூலமாக மணல் திருட்டு அதிக அளவில் நடப்பதாக எங்களுக்குத் தகவல்கள் வந்தன. அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது" என்றார்கள்.