ஒரு சிம் கார்டு... ஒரு மெயில்... 12.75 லட்சம் வங்கியிலிருந்து கொள்ளை..! ஹைடெக் திருடர்கள் உஷார்

சென்னையில், பல்வேறு வாடிக்கையாளர்களின் சிம் கார்டுகளை ஹேக் செய்து, அதன் மூலம் வங்கிக் கணக்கையும் ஹேக் செய்து,  1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடந்த ஏப்ரல் மாதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதே பாணியில், கோவையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இம்முறை ஆறுமுகம் என்ற தொழிலதிபரின் வங்கிக் கணக்கு குறிவைக்கப்பட்டது.

சிம் கார்டு ஹேக்கிங்


கோவை, பேரூரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியாவில், கடன் கணக்கான ஓவர் டிராஃப்ட் கணக்கு வைத்துள்ளார். 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்த நிலையில், அதில் 12.75 லட்சம் ரூபாய் இருந்தது. அதை சிம் கார்டு மூலம் ஹைடெக்காக கொள்ளையடித்துள்ளனர்.

இதுபற்றி போலீஸிடம் விசாரித்தோம்," முதலில் ஆறுமுகத்தின் மெயில் ஐடி-யை ஹேக் செய்து, அதிலிருந்து சில ஆவணங்களை எடுத்துள்ளனர். அந்த ஆவணங்கள் மூலம், ஏர்செல் ஏஜென்சியில், அவரது (ஆறுமுகம்) சிம்கார்டு தொலைந்துவிட்டதாகக்கூறி, டூப்ளிகேட் சிம் கார்டு எடுத்துள்ளனர். ஆறுமுகத்தின் வங்கி பரிவர்த்தனைக்கு இந்த சிம்கார்டுதான் பயன்படுத்தப்படுகிறது. பரிவர்த்தனைக்கான ஒன் டைம் பாஸ்வேர்டு இந்த சிம்கார்டுக்குதான் வரும். அதைப்பயன்படுத்தி, ஆர்.டி.ஜி.எஸ் பரிவர்த்தனை மூலம் 12.75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பாங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து, பஞ்சாப் நேஷனல் பாங்க் மற்றும் லக்னோவில் ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் ஆகிய இரண்டு வங்கிக்கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கணக்குகளில் இருந்து, கிட்டத்தட்ட 10 வங்கிக்கணக்குகளுக்கு இந்தப் பணம் மாறியுள்ளது"  என்றனர்.

ஆறுமுகத்திடம் பேசினோம், "எனது சிம்கார்டு ஹேக் செய்யப்பட்டதே எனக்கு ஒருநாள் கழித்துத்தான் தெரியவந்தது. பின்னர், சுதாரித்துக்கொண்டு வங்கிக் கணக்கை பிளாக் செய்வதற்குள், 12.75 லட்சத்தை சுருட்டிவிட்டனர். வங்கியில் இருந்து எங்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்குவதில்லை. சரி சிம்கார்டு எடுத்தவர்கள் யார் என்று ஏர்செல் ஏஜென்சியிடம் விசாரித்தால், "எங்களுக்கு தெரியவில்லை. இங்கு இரண்டு மாதங்களாக சி.சி.டி.வி கேமராவும் வேலை செய்யவில்லை" என்கின்றனர். மேலும், எங்களது நிறுவனத்தின் மீது தவறில்லை எனவும் ஏர்செல் கூறியுள்ளது.

ஆறுமுகம்
 

பணப் பரிமாற்றம் நடந்த ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் கணக்கில், எனது 1.50 லட்சம் ரூபாய் பணம் உள்ளது. அந்த வங்கிக் கணக்கை முடக்கி விட்டனர். ஆனால், இன்னும் என் கைக்கு பணம் வரவில்லை. ஆர்.பி.ஐ-யிடமும் புகார் அளித்துள்ளேன். கொள்ளை போன பணத்துக்கு இப்போதும் வட்டிக் கட்டிக் கொண்டு இருக்கிறேன். பணம் கொள்ளை போனதால், வெளியில் இருந்து கடன் வாங்கி அதற்கும் வட்டிக் கட்டிவருகிறேன்" என்றார் வேதனையுடன்.

நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ் அமைப்பின் இயக்குநர் அமர் பிரசாத் ரெட்டி கூறுகையில், "தற்போதைய சூழலுக்கு மெயில் ஐ.டி-யை ஹேக் செய்வது மிகவும் எளிதான ஒன்று. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட சிம்கார்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன்தான் கொள்ளை நடந்திருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால், சிம் கார்டு வாங்குவது அவ்வளவு எளிதான ஒன்றில்லை. நம்மைப் பற்றி நன்கு தெரிந்தவர்களால்கூட, மெயில் அக்கவுன்ட்டை எளிதாக ஹேக் செய்ய முடியும். ஹேக்கிங் என்றாலே, நைஜீரியர்கள் என்று சொல்லப்படுவது ஃபேஷனாகிவிட்டது. ஆனால், இதுபோன்ற ஹேக்கிங்கில் நம் ஊரைச் சேர்ந்வர்கள்தான் ஈடுபட்டுவருகிறார்கள். தற்போது, டெக்னாலஜி வேகமாக முன்னேறி வருகிறது. நமது முகத்தையேக்கூட பாஸ்வேர்டாக பயன்படுத்தி இதுபோன்ற கொள்ளையில் இருந்து தப்பிக்கலாம்" என்றார்.

சென்னை, கோவையைத் தொடர்ந்து தற்போது திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி உரிமையாளர்களின் மெயில் ஐ.டி-க்களும் ஹேக் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!