வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (07/12/2017)

கடைசி தொடர்பு:11:15 (07/12/2017)

கெட்டுப்போன ஆர்.ஓ வாட்டர் ப்ளான்ட்! - 7 லட்சத்தை வீணடித்த அதிகாரிகள்

''ஆர்.ஓ வாட்டர் ப்ளான்ட் ரிப்பேர் ஆகி ரெண்டு வருஷம் ஆகிப்போச்சு. என்னான்னு கேட்க யாருமில்லை'' என்று புலம்புகிறார்கள், சக்கந்தி கிராம மக்கள்.

இதுகுறித்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மாணிக்கம் பேசும்போது, “சிவகங்கை மாவட்டம் சக்கந்தி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம், கோமாளிப்பட்டி. இந்த கிராமத்தின் அருகே, கிராஃபைட் தொழிற்சாலை அமைந்திருக்கிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவுகளால், அந்தக் கிராமத்தில் உள்ள விவசாயநிலங்களில் நிலத்தடி நீர் கெட்டுப்பொய்விட்டது. இதனால், அங்குள்ள மக்களுக்கு கிட்னி பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னைக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதற்காக, மக்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் ராஜாராமிடம் முறையிட்டோம். அதன் பிறகு, எங்கள் ஊருக்கென்று ஆர்.ஓ வாட்டர் ப்ளான்ட் 7 லட்சம் ரூபாய் செலவில் போட்டுக்கொடுத்தார்.

ஒரு குடம் இரண்டு ரூபாய்க்கு பஞ்சாயத்து சார்பில் விற்பனை செய்யப்பட்டது. பராமரிப்புச்செலவுகளுக்கு அந்த பணம் சரியாக இருந்தது. காலப்போக்கில் மின்சாரப் பற்றாக்குறையால் அந்த பிளான்டை பயன்படுத்தமுடியாமல் கெட்டுப் போய்விட்டது. நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட பிறகு அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு அந்த மோட்டரை கழற்றிப் போய் இரண்டு வருஷம் ஆகிவிட்டது. இதுவரைக்கு அதிகாரிகள் என்னான்னுகூட பார்க்கவில்லை. நானும் தற்போது வந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் லதாவிடம் மனு கொடுத்திருக்கிறேன். என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. இதுவரைக்கு ஆர்.ஓ பிளான்ட் வேலைசெய்யவில்லை. எங்கள் ஊருக்குள் ஒருசில பகுதிகளுக்கு தண்ணீர் பைப் மூலம் வராமல் இருந்தது. தற்போது அந்த பிரச்னை இல்லை. குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த தண்ணீரை அடைக்காமல் இருப்பதால் தண்ணீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும்  தண்ணீர் பைப் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த இணைப்புக்கு கீழே பள்ளம் தோண்டி தண்ணீர்  பிடிக்கிறார்கள். மேலும், தண்ணீர் தாராளமாக கிடைப்பதால் அந்தக் குழிக்குள் கிடக்கும் தண்ணீர் குழாய்க்குள் திரும்பிச் செல்வதும் தேங்கி கிடக்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாவதுமாக இருக்கிறது. இதை மாவட்ட நிர்வாகம் சரிசெய்து கொடுக்கவேண்டும் என்பதே எங்கள் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது” என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க