மகளை வன்கொடுமை செய்த தந்தைக்கு 3 ஆயுள் தண்டனை! திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கொலை வழக்கில் 7 வருடம் சிறையில் இருந்த ஒருவர், மகளை வன்கொடுமை செய்த வழக்கில் 3 ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள அரசன்குடி மேல விளாங்குளம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காமராஜ். கூலித்தொழிலாளியான இவர், கடந்த 1997-ம் ஆண்டு இடப்பிரச்னையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தானேஷ்லால் என்பவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் 7 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்திருந்தார். இவருக்கு மனைவி பழனியம்மாள், மகள் உள்ளனர். இவர்களது மகள் பானு (பெயர் மாற்றம்). சிறுமியான இவர் மனநிலை பாதிக்கப்பட்டநிலையில் அதற்கான சிகிச்சையும் பெற்றுவந்தார்.

இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் பழனியம்மாள் கூலி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் காமராஜூம், பானுவும் இருந்தனர். மனநிலை பாதிக்கப்பட்டிருந்த பானு வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அவரை உள்ளே அழைத்த காமராஜ், மகள் என்றும் பாராமல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. தந்தையின் செயலால் அதிர்ச்சியடைந்த பானு சத்தம் போடவே, கோபமடைந்த காமராஜ், நான் ஏற்கெனவே ஒரு கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போனவன். நடந்ததை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், தொடர்ந்து மிரட்டி பலமுறை வன்கொடுமை செய்ததால் பானு கர்ப்பமானார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த பழனியம்மாள், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைதுசெய்தனர். இதனிடையே பானுக்கு, கடந்த 2015 மார்ச் மாதம் 3-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சுபிதா என்று பெயர் வைத்து,  குழந்தையைத் தத்து கொடுத்தனர். ஆனால், அந்தக் குழந்தை கடந்த 2015-ம் ஆண்டு, ஜூன் மாதம் 26-ம் தேதி இறந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததை அடுத்து நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், குற்றம் சாட்டப்பட்ட காமராஜூக்கு பாலியல் வன்கொடுமை சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் 3 ஆயுள் தண்டனையும், ஒவ்வொரு தண்டனைக்கும் ரூபாய் 1000 என 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் ஒவ்வொரு தண்டனைக்கும் ஒரு வருடம் என 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.

மேலும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக ஒரு வருடம் சிறைத் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். 3 ஆயுள் தண்டனைகளையும் தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதனையடுத்து காமராஜ் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!