வாழ்க்கைக் கல்வியும் தேவை! - மதுரையில் அசத்தும் சிறப்புப் பள்ளி

சிறப்பு பள்ளி

மதுரை  அண்ணா நகர் கடை வீதிகளில், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் காய்கறிகளை எடைபோட்டு, சரிபார்த்துக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தனர் . விசாரிக்கையில், வண்டியூர் ஸ்டெல்லா நகர் ஓ.எல்.ஆர் சிறப்புப் பள்ளி மாணவர்கள் எனத் தெரிவித்தனர் . அதைத் தொடர்ந்து, மறுநாளே அவர்களை அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று பார்த்தோம்.

யோகா பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை கடந்து, அப்பள்ளியின் முதல்வர் மேரி புவனாராணியைச் சந்தித்தோம்.

“இந்தப் பள்ளி ஆட்டிசம் குறைபாடு , மனவளர்ச்சிக் குறைபாடு, கற்றல் குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி. குறைந்த கட்டணம் அல்லது இலவசக் கல்விதான் அளிக்கப்படுகிறது. இந்த சிறப்புப் பள்ளியில், மாணவர்களுக்குத் தேவையான எல்லா பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. பிற பள்ளிகளில், மாணவர்களுக்கு மட்டும்தான் சொல்லித்தருவார்கள். இங்கு, குழந்தைகளோடு பெற்றோருக்கும் சொல்லிக்கொடுக்கிறோம். எவ்வாறு பார்த்துக்கொள்ள வேண்டும்;  உளவியல் சார்ந்த பிரச்னை ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் என்ற பயிற்சிகளை அடிக்கடி வழங்கிறோம் . எங்கள் பள்ளி, குழந்தைகளுக்கு வீடு மாதிரியே இருக்கும். ஆசிரியர்கள் அவர்களோடு அப்படித்தான் பழகுவார்கள். இது, அறக்கட்டளையில் செயல்படும் பள்ளி என்பதால், சுற்றியுள்ள நண்பர்கள் உதவுவதாலும் , இங்கு படித்த மாணவர்களின் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் நல்ல முறையில் பயிற்சி பெற்றுவிட்டனர் என்ற மன நிறைவிலும்தான் உதவி செய்கின்றனர். சேவை மனப்பான்மையில் இயக்குவதால், இங்கு பயிற்சி வகுப்பெடுக்கும் ஆசிரியர்களில் பலரும் ஏழ்மையைப் புரிந்துகொள்பவர்களாக இருப்பதால், இந்த மாணவர்களை ஒரு தாயாக இருந்து கவனித்துவருகின்றனர் .

 

olr

 

மாணவர்களுக்கு, கல்வியை மட்டும் அல்லாமல் வாழ்க்கைக் கல்வியையும் சேர்த்தே சொல்லித்தருகிறோம். அதனால்தான், கடைகளில் பொருள்களை எடை போடுவது , தொழிற்சாலையில் பொருள்கள் தயாரிப்பது உள்ளிட்ட விஷயங்களை நேரடியாகக் காணச் செய்கிறோம். இங்குள்ள ஒவ்வொரு மாணவரையும் வெளியில் கூட்டிச்செல்வது சவாலான விசயம்தான். ஆனால், அதுதான் இவர்களைத் தனிமையிலிருந்து உடைத்து வெளியே கொண்டுவரும் . ஆட்டிப்படைக்கும் ஆட்டிசத்திலிருந்து வெளிவர வேண்டும் என்றால், அவர்களை வீட்டுக்குள்ளே முடக்கிவிடக்கூடாது. அவர்களின் உணர்வை மதித்து தேவையான பயிற்சியை அளிக்க வேண்டும்'' என்றார் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!