ஆற்றுநீரை மாசுபடுத்தும் எரிசாராயக் கழிவுகள்! - தஞ்சை ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கூனஞ்சேரி மற்றும்  அதை அடுத்துள்ள நூற்றுக்கணக்கான கிராமங்கள், இங்கு ஓடக்கூடிய பலவாறு மூலம் பாசனவசதி பெறுகின்றன. இதன்மூலம் 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களில் விவசாயம் நடைபெறுகிறது. இந்நிலையில், இப்பகுதியில் அமைந்துள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையின் எரிசாராயக் கழிவுகள் ஆற்றுநீரில் கலக்கப்படுவதாகவும், இதனால் தண்ணீர் மற்றும் மண் மாசுபடுவதால் பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

கூனஞ்சேரியில் தொடங்கி சீர்காழி அருகே மகேந்திரப்பள்ளியில் நிறைவடைகிறது பலவாறு. மருத்துவக்குடி, நாகக்குடி, உமையாள்புரம், அலவந்திபுரம், பாபுராஜபுரம், ராமானுஜபுரம், திம்மக்குடி, சுவாமிமலை, இன்னம்பூர், கும்பகோணம், திருவிடைமருதூர், குத்தாலம், மயிலாடுதுறை, சிர்காழி மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களில், பலவாறு மூலம் 48 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. திருமண்டக்குடி சர்க்கரை ஆலையின் எரிசாராயக் கழிவுகள், சுத்திகரிக்கப்படாமலே மருத்துவக்குடி அருகே பலவாற்றில் கலந்து விடப்படுகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனக் கழிவுகளால் பயிர்கள் பாதிக்கப்பட்டு, மகசூல்  பாதிக்கப்படும் என இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள். இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகோரி, விரைவில் போராட்டம் நடத்தவும் இப்பகுதி விவசாயிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். தஞ்சை மாவ ட்ட ஆட்சியர் அண்ணாதுரை, தனியார் சர்க்கரை ஆலைமீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!