பூட்டுபோடப்பட்ட கட்சி அலுவலகம்… தேனி அ.தி.மு.க.வில் என்ன நடக்கிறது?

தேனி மாவட்டம் போடி விலக்கு அருகே உள்ளது, மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம். இன்னும் சொல்ல வேண்டுமானால் சமீபத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா மைதானத்துக்கு அருகே இருக்கிறது இந்த அலுவலகம். வடக்கு பார்த்து கை உயர்த்தி நிற்கும் எம்.ஜி.ஆர் சிலை; அந்தச் சிலைக்குப் பின்னால் இருக்கும் அலுவலகக் கட்டடம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாளான டிசம்பர் 5-ம் தேதியன்று தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்கள் சிலர், கட்சி அலுவலகத்துக்கு வந்து எம்.ஜி.ஆரின் சிலையைச் சுத்தம்செய்து மாலை போட்டுவிட்டு அருகே நினைவு அஞ்சலி பேனர்கள் இரண்டை நிறுவினர். அதை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், "எங்களைக் கேட்காமல் எப்படி பேனர் வைக்கலாம்?" என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து தகராறு வெடிக்கும் சூழலில், போலீஸார் தலையிட்டு சமாதானம் செய்தனர். பின்னர் அ.தி.மு.க. அலுவலகத்துக்குப் பூட்டு போடப்பட்டது. உடனே தங்க தமிழ்ச்செல்வன் அணியினருக்குப் போட்டியாக, இரண்டு பேனர்களை அங்கே நிறுவினர் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள். எங்கே மீண்டும் பிரச்னை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் போலீஸார் பாதுகாப்புக்காக அங்கு நிறுத்தப்பட்டனர்.

தேனி மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

அலுவலகம் யாருக்குச் சொந்தம்?

அன்றுவரை தேனி மாவட்ட அ.தி.மு.க-வுக்கு கட்சி அலுவலகம் என்று ஒன்று இல்லை. கட்சியின் மாவட்டச் செயலாளர் எங்கிருக்கிறாரோ அந்த இடம்தான்  கட்சி அலுவலகம். அ.தி.மு.க. வரலாற்றில் தனியிடம் பிடிக்கும் அளவுக்கு தேனி மாவட்டத்துக்கு முக்கியத்துவம் இருந்தாலும், கட்சி அலுவலகம் இல்லையே என்ற குறையைக் கருத்தில்கொண்டு ஓ.பி.எஸ். முயற்சியால் நிலம் வாங்கப்பட்டு, போடி விலக்கு அருகே கட்சி அலுவலகம் கட்டப்பட்டது. 2016-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அலுவலகக் கட்டடத்தைத் திறந்துவைத்தார். அப்போது, டி.டி. சிவக்குமார் மாவட்டச் செயலாளர். இவர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர். அதன் பிறகு தங்க தமிழ்ச்செல்வன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 

பின்னர், கட்சிக்குள் நடந்த அதிரடி மாற்றங்கள் காரணமாக, பன்னீர்செல்வம் அணி, தங்க தமிழ்ச்செல்வன் அணி என இரு அணிகள் உருவாகின. டி.டி.வி. ஆதரவாளராக இருந்தாலும், இப்போதும் தங்க தமிழ்ச்செல்வன்தான் மாவட்டச் செயலாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை இலையை அகற்றப் பார்க்கிறார்கள்!

பேனர் மற்றும் கட்சி அலுவலகத்தில் மோதல் தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பினரிடம் விசாரித்தோம். "கட்சி அலுவலகம் கட்ட எல்லா முயற்சிகளையும் எடுத்து, அதை நிறைவேற்றியது பன்னீர்செல்வம்தான். இடம் பார்த்ததில் இருந்து, தனது சொந்தப் பணத்தைப் போட்டு அலுவலகம் கட்டினார். ஆனால், இன்று எங்களை எதிர்க்கிறார்கள். ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் பெயரில் கட்டடம் உள்ளது. அதனால், அவர்களுக்குத்தான் சொந்தமாம். பூங்குன்றன் பெயரில் கட்டட ஆவணங்களை எழுதக் காரணம் யார் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சம்பவத்தன்று, அவர்கள் அலுவலகக் கட்டடத்தில் இருக்கும் இரட்டை இலைச் சின்னத்தையும், கொடிக் கம்பத்தையும் அகற்ற திட்டமிட்டிருந்தார்கள். அந்த விஷயம் எங்களுக்குத் தெரியவந்ததால், நாங்கள் உடனடியாக அங்கே சென்றோம். அப்படி சென்றிருக்காவிட்டால் சின்னத்தையும், கொடிக் கம்பத்தையும் அகற்றியிருப்பார்கள். விரைவில் அலுவலகத்தை மீட்போம். கூடவே இவர்களின் கட்சிப் பதவிகளும் பறிக்கப்படும்" என்றனர்.

 

தேனி மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

இதுதொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் தரப்பிடம் பேசியபோது, "கட்சிக்கான அலுவலகக் கட்டடம், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது கட்டியது. பூங்குன்றன் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுபோக, கட்டடத்துக்கு மின்சாரக் கட்டணம், சொத்துவரி, காவலாளிக்கு ஊதியம் என எல்லா செலவுகளையும் இன்றுவரை தங்க தமிழ்ச்செல்வன்தான் செலுத்திக் கொண்டிருக்கிறார். அது எங்கள் கட்டடம். எங்களால் எக்காலத்திலும் அதை விட்டுக்கொடுக்க முடியாது. எங்களிடம் இருந்து அந்தக் கட்டடத்தைப் பறிக்க நினைத்தால் அதனை சட்டரீதியாக சந்திப்போம்" என்றனர்.

என்ன செய்யப்போகிறார் பன்னீர்செல்வம்? 

எம்.ஜி.ஆர். சிலை இருக்கும் கட்சி அலுவலகம் அருகிலேயே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றபோதிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸூம் கட்சி அலுவலகம் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தற்போது சின்னம் மீண்டும் கிடைத்து, கட்சி மேலும் வலுவாகி இருக்கிறது என்று சொல்லிக்கொள்ளும் பன்னீர்செல்வம், தன் சொந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கட்சி அலுவலகக் குழப்பம் தொடர்பாக என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதுவரை சின்னச்சின்ன பிரச்னைகளில் பன்னீர்செல்வமும், தங்க தமிழ்ச்செல்வனும் உரசிக் கொண்டாலும், தற்போது அலுவலகக் கட்டடப் பிரச்னையில் நேரடியாக தங்கள் மோதலைத் தொடங்கியுள்ளனர். நிலைமையை எதிர்கொள்ள என்ன செய்யப்போகிறார் பன்னீர்செல்வம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!