வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (07/12/2017)

கடைசி தொடர்பு:17:36 (07/12/2017)

400 ஆண்டுக்கால சாபம் நீங்கியது! மைசூர் மன்னர் குடும்பத்துக்கு ஆண் வாரிசு 

400 ஆண்டுகளுக்கு முன், மைசூர் விசயநகர சாம்ராஜ்ஜியத்தை திருமலைராஜாவிடமிருந்து ராஜா உடையார் என்பவர் கைப்பற்றினார். அப்போது, அங்கிருந்து தப்பிய திருமலைராஜாவின் மனைவி அலமேலம்மா, காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன், உடையார் பரம்பரைக்கு ' தலக்காடு மண்ணாகப் போகட்டும், காவிரியில் இருக்கும் மலங்கி நீர்ச்சுழிகளால் சூழட்டும் என்றும், மைசூரின் உடையார்களுக்கு வாரிசு இல்லாமல் போகட்டும்' எனவும் அவர் சாபம் விடுத்துள்ளார். 

400 சாபம் நீங்கிய மன்னர் குடும்பம்

சாபத்தின் காரணமோ! கடந்த 400 ஆண்டுகளுக்கு மேல் மைசூர் உடையார் மன்னர் குடும்பத்தில் நேரடி வாரிசு இல்லாமல் இருந்துவந்தது. மைசூர் சாம்ராஜ்ஜியத்தில் தத்தெடுக்கப்பட்ட மன்னர்களாக ஆட்சிசெய்துவந்துள்ளனர். 

நாடு சுதந்திரம் பெற்றபோது மைசூர் மாகாண மன்னராக இருந்தவர், ஜெயசாமராஜேந்திர உடையார். வாரிசு இல்லாததால், அவர் கந்ததத்தா நரசிம்ம ராஜ உடையாரைத் தனது மகனாகத் தத்தெடுத்தார். அவர், 1974-ம் ஆண்டு மன்னராக முடி சூட்டப்பட்டார். கந்ததத்தா நரசிம்மராஜ உடையார், கடந்த 2013-ம் ஆண்டு காலமானார். அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லை. எனவே, அவரது மூத்த சகோதரி காயத்ரி தேவியின் பேரன் யதுவீர கோபாலராஜே அர்ஸ் என்பவர் அடுத்த வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அவருக்கு, மைசூரின் 27-வது மன்னராக முடிசூட்டி, யதுவீர கிருஷ்ணதத்தா சாம் ராஜ உடையார் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. அவருக்கும் ராஜ்காட் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த திரிஷாதேவி என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி திருமணம் நடந்தது. கடந்த ஜூன் மாதம் திரிஷாதேவி கர்ப்பமான தகவலை வெளியிட்டு, சாபம் நீங்கியதாக மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று, பெங்களூரில் உள்ள கிளவுட்நைன் மருத்துவமனையில் திரிஷா தேவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததன்மூலம், மன்னர் குடும்பத்துக்கு 400 ஆண்டுகால சாபம் முழுமையாக நீங்கிவிட்டதாக, மைசூர் மன்னர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.