பத்திரிகையாளர்களை வசைபாடிய வங்கி மேலாளர்!

தேனி மாவட்டம், போடி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தங்கக் கவசம் காணாமல் போய்விட்டதாக, போடி மக்கள் பலமுறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனு கொடுத்தனர். பல மாத முயற்சிக்குப் பிறகு, தங்கக் கவசம், போடி சென்ட்ரல் வங்கி லாக்கரில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, இன்று லாக்கர் திறக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன், உதவி ஆணையர் சிவலிங்கம், கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் போடி நகர காவல் ஆய்வாளர் ஐயம்பெருமாள் ஆகியோரின் தலைமையில் பேங்க் லாக்கர் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த தங்கக்கவசம் மீட்கப்பட்டது. அப்போது செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை வங்கிக்கு செல்லும் பாதையின் உள்ளே விடாமல் தடுத்தார், வங்கி மேலாளர் மகேஷ்குமார்.

’மக்கள் கோரிக்கையின் அடிப்படையில்தான் இந்த லாக்கர் திறக்கப்படுகிறது.  அதை நாங்கள் பதிவுசெய்ய வேண்டும்!’ என்று பத்திரிகையாளர்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்காத மகேஷ்குமார், ’எல்லோரும் உடனே இங்கிருந்து போய்விடுங்கள்’ என்று குரலை உயர்த்த ஆரம்பித்தார். ‘வெளியில்தானே நிற்கிறோம்’ என்று பத்திரிகையாளர்கள் பதில்கொடுக்க. ‘இடியட்ஸ்’ என்று திட்டினார். இதனால் பத்திரிகையாளர்கள் அதிருப்தியடைந்தனர். அதற்குள் போலீஸார் பத்திரிகையாளர்களைச் சமாதானம்செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் மகேஷ்குமார் மீது போலீஸில் புகார் கொடுப்பது பற்றி பத்திரிகையாளர்கள் ஆலோசித்துவருகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!