வெளியிடப்பட்ட நேரம்: 14:48 (07/12/2017)

கடைசி தொடர்பு:15:05 (07/12/2017)

`முதல்வர் வந்தே ஆக வேண்டும்!' - குழித்துறைப் போராட்டக்களத்தில் மீனவர்கள் கொந்தளிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களை மீட்டுத் தரக்கோரி,  8 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள், இன்று காலை முதல் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

kanniyakumari
 

கடந்த வாரம், கன்னியாகுமரியில் மையம்கொண்ட ஒகி புயல்,  அந்த மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. ஒகி புயலின்போது கடலுக்குச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். மாயமான மீனவர்களை இந்தியக் கடற்படையினர் தேடிவருகின்றனர். காணாமல் போன மீனவர்களின் படகுகள் குஜராத், கோவா, கேரளா உள்ளிட்ட கடல்பகுதியில் கரை ஒதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்துபோன மீனவர்களின் உடல்களும் கேரளா, லட்சத்தீவு உள்ளிட்ட கடல் பகுதிகளில் கரை ஒதுங்கிவருகிறது. இதனால், மாயமான மீனவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

kanniuakumari
 

இந்நிலையில், ஒகி புயலால் காணாமல் போன 1000-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்த்த 8 மீனவ கிராமத்து மக்கள், இன்று போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். நீரோடி, இரயுமன் துறை, பூத்துறை, தூத்தூர், சின்னத்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டம் துறை, புத்தன் துறை  ஆகிய 8 மீனவ கிராம மக்களும் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், குழித்துறையில் ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுடன் நெல்லை சரக டி.ஐ.ஜி கபில் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்.

kanniyakumari
 

போராட்டக் களத்தில், மீனவ மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும்வரை போராட்டம் தொடரும்’, ‘தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், கேரள முதல்வரிடம் மனு கொடுப்போம்’ என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.  ரயில் மறியலால், நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  

 


 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க