வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (07/12/2017)

கடைசி தொடர்பு:16:55 (07/12/2017)

நொய்யலாக மாறிய வைகை! நுரை பொங்கி வருவதால் மக்கள் அதிர்ச்சி

கோவை மாவட்டத்தில் உற்பத்தியாகித் திருப்பூர் மாவட்டத்தில் பாய்ந்து ஈரோடு மாவட்டம் ஒரத்துப்பாளையம் அணைக்கட்டில் சேரும் நொய்யல் நதி கிட்டத்தட்ட நொந்தேபோனது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைக் கழிவுகள் எல்லாம் இந்த நதியில் சேர்ந்து, நொய்யல் நதியைப் பாழாக்கிவிட்டன.

ஒரத்துப்பாளையம் அணைக்கட்டில் தேங்கும் நீரை விவசாயத்துக்குக்கூட பயன்படுத்த முடியாத நிலை. நிலத்தடி நீரும் கெட்டுப்போனது.  சமீபத்தில், நொய்யல் ஆற்றில் நுரை பொங்க நீர் ஓடுவதைக் கண்ட மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பணன், கோவை மக்கள் நுரை பொங்க பொங்க சோப்புப் போட்டுக் குளிப்பதால் நொய்யல் நதியில் அதிக நுரை வருவதாக கருத்து தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது. 

நுரை பொங்க ஓடும் வைகை

நொய்யல் மட்டுமல்ல இப்போது வைகை நதியும் நுரை பொங்க பொங்க வருவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 5-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்குத் தண்ணீர் வந்தபோது நுரை பொங்கியிருந்தது. வைகை அணையில் திறந்துவிடப்பட்டத் தண்ணீர் நுரை பொங்க வந்திருப்பது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, திண்டுக்கல் நகரக் கழிவுகள் காரணமாகவே வைகை நதி நீர் மாசடைவதாகச் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க