வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (07/12/2017)

கடைசி தொடர்பு:17:55 (07/12/2017)

காப்பீடு பணம் தர மறுக்கும் ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு இன்ஷூரன்ஸ்! போராட்டத்தில் குதித்த விவசாயிகள் கைது

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தாலுகா புதுவயலில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  400 பேர்கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சாக்கோட்டை கூட்டுறவு வங்கியில் 227 விவசாயிகளுக்கும் அமலாபட்டி கூட்டுறவு வங்கியில் 340 விவசாயிகளுக்கும் பள்ளத்தூர் கூட்டுறவு வங்கியில் 108 விவசாயிகளுக்கும் மித்ராவயல் வங்கியில் 23 விவசாயிகளுக்கும் சித்திவயல் வங்கியில் 30 விவசாயிகளுக்கும் அரியக்குடியில் 20 விவசாயிகளுக்கும் ஆகிய 750 விவசாயிகளுக்கு சென்ற ஆண்டிற்கான நவம்பர்- டிசம்பரில் பயிர் இன்சூரன்ஸ் செய்தவர்களுக்கு பயிர்க்காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. சாக்கோட்டை ஒன்றியத்தில் சுமார் 10 ஆயிரம் விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்தார்கள். அதில், 900 விவசாயிகளுக்கு மட்டுமே பயிர்க்காப்பீடுத் தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. இங்குள்ள 6 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளிலிருந்து 8 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வர வேண்டியிருக்கிறது.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு காரைக்குடி தாசில்தார் மகேஸ்வரன் தலைமையில் சமாதானம் கூட்டம் நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் படி காப்பீடு தொகை வழங்கவில்லை. இந்நிலையில்தான், இன்று புதுவயலில் அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒருமணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகா தலைவர் ராசேந்திரன், தாலுகா செயலாளர் கண்ணன், முத்துராமலிங்கம், சிதம்பரம் மற்றும் மித் ராவயல் பாண்டிதுரை ஆகியோர் தலைமையில் பயிர்க்காப்பீடு கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது, எங்களுக்கு வர வேண்டிய பணத்தைக் கேட்டுப் போராடினால் போலீஸ் கைது செய்கிறார்கள். விவசாய நாடான இந்தியாவின் நிலை இதுதான்'' வேதனைப்பட்டனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுந்த விவசாயி பாண்டிதுரையிடம் பேசும்போது, "ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு இன்ஜூரன்ஸ் வாங்கிய விவசாயிகளுக்கு காப்பீடு பணம் கொடுக்கத் தயாராக இல்லை. மறியலுக்குப் பிறகு. நடந்த பேச்சு வார்த்தையில் வருகின்ற 21-ம் தேதி காப்பீடு பணம் வழங்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க