`தமிழகத்தின் முதல்வர் பன்வாரிலால் புரோஹித்தா' - வைகோ ஆவேசம்

Vaiko pressmeet

’ஆளுநர் ஒரு முதலமைச்சரைப்போல செயல்படுவது கண்டிக்கத்தக்கது’ என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள வில்லிச்சேரியில் ம.தி.மு.க நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "ஆற்றுமணலைச் சுரண்டி எடுத்து தமிழகத்தை மாறவிடாமல் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளை மூட வலியுறுத்தும் விதமாகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சிறப்பான ஆணையை வழங்கியுள்ளது. ஆனால், அதற்கு எதிராகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. செயற்கை முறையிலான மணலை உற்பத்தி செய்யவும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய இறக்குமதியாளர்களும் ஆர்வமாக உள்ள நிலையில், அரசு அனுமதி அளிக்க முன்வர வேண்டும்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாநிலத்தின் முதல்வர்போல செயல்படுகிறார். கோவை, நெல்லைக்குச் சென்றபோது பொதுமக்கள் மத்தியில் இவர்தான் ஆட்சி செய்கிறார் என்பதுபோல நடந்துகொண்ட விதம் கூட்டாச்சிக்குப் பெரும் ஆபத்து. தமிழக சரித்திரத்தில் இது போன்று நிகழ்ந்ததே இல்லை. ஆளுநரின் போக்கு தமிழகத்தில் இரட்டை ஆட்சி முறை நடைபெறுவதைக் குறிக்கிறது. ஆளுநர் டெல்லிக்கு சேவகம் செய்யும் நிலையிலிருந்து டெல்லியின் ஏஜென்ட்டாகச் செயல்படுகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு பரிசீலனையின்போது நடிகர் விஷால் மனு முதலில் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவித்து, பின்னர் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதனால், தேர்தல் அதிகாரியின் மீது நம்பகத்தன்மை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆளும்கட்சியின் உத்தரவுக்கு இணங்கத் தேர்தல் அதிகாரி செயல்படுகிறாரோ என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தேர்தலையும் அவர் இப்படித்தான் நடத்திச் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!