வெளியிடப்பட்ட நேரம்: 16:24 (07/12/2017)

கடைசி தொடர்பு:18:56 (07/12/2017)

அன்பில் தீபாம்மாவிற்கு... தமிழக வாக்காளன் எழுதும் மடல்... இல்லல்ல கடிதம்!

வணக்கம்.

ஜெ.தீபாவாகிய உங்களுக்கு, தமிழக வாக்காளனின் மனம்திறந்த மடல்.

ஆர்.கே.நகர் தேர்தலில் உங்களுடைய வேட்புமனு ஏற்கப்படாதது எனக்கு எதிர்பாராத ஒன்று. ஆனால், நீங்கள் எதிர்பார்த்த ஒன்று என்றே நம்புகிறேன். தமிழ்ப்பட ஹீரோக்கள், பல தடைகளை மீறி கடைசி நொடியில் நீதிமன்றத்தினுள் நுழைவதுபோல, வேட்புமனு நிராகரிக்கப்படவேண்டும் என்றே, கடைசி ஆளாக வந்து கடைசி டோக்கனாக 91-வது எண்ணைப் பெற்றதிலேயே உங்களுடைய (அ)லட்சியம் தெரிகிறது. அதன்பிறகும் படிவத்தில் சொத்து விவரங்களைப் பூர்த்திசெய்யாமல் கொடுத்து, நீங்கள் எதிர்பார்த்தபடியே தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒருகாலத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் பலம் நீர்த்துப்போன உண்மை புரிந்ததால், தேர்தலில் படுதோல்வி கண்டால் உங்களுடைய எதிர்கால அரசியல் வாழ்க்கை(!)யே சூன்யமாகும் என்ற பயத்தில் பின்வாங்கியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

தீபா

சொத்து விவரம் குறித்து எழுதியதும், போயஸ் கார்டன் சொத்து மீதான உங்களுடைய எதிர்பார்ப்பு நினைவுக்கு வருகிறது. ஓராண்டுக்கு முன்னர் உங்களது அறிமுக நாள்கள் நினைவுக்கு வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்குப் பிறகு, அவரின் அண்ணன் மகள் என்ற முத்திரையுடன் தமிழக மக்களின் பார்வைக்கு வந்தவர்தான் நீங்கள். `ஒன்றரைக் கோடித் தொண்டர்களால் ஆன இயக்கம்' என்று திரும்பத் திரும்பச் சொல்லப்படும் அ.தி.மு.க-வின் தொண்டர்கள், சசிகலாவின் `ஜெயலலிதா வெர்ஷன்-2' அவதாரத்தைப் பார்த்து மெர்சலாகியிருந்த நேரத்தில்தான் நீங்கள் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தீர்கள்.

காலங்காலமாக கூன் விழுந்த முதுகோடு ஜெயலலிதாவை வணங்கிப் பழகிய அடிமைக் கூட்டம், சட்டென சசிகலாவுக்கு வணக்கம் வைக்கத் தொடங்கியதை அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழக மக்களாலும் ஜீரணிக்க இயலவில்லை. சின்னம்மாவின் `தியாக வாழ்க்கை'யை உடைந்த ரெக்கார்டு போல அனைத்து அடிமைகளும் போற்றிப் புகழ்ந்த நேரத்தில்தான், அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் அடுத்த தலைவியாக, அடுத்த ஜெயலலிதாவாக நீங்கள் அவதரித்தீர்கள்! 

தீபா

ஜெயலலிதாவைப் போலவே நடை, உடை, கொண்டை வலை, வாட்ச் மாற்றத்துடன் சசிகலா வலம்வந்தபோது, மேக்கப் எதுவுமில்லாமல் சேலையை இழுத்துப் போத்தினாலே பாதி ஜெயலலிதாவாகத் தோற்றமளித்த நீங்கள், மாறுவேடப் போட்டியில் சசிகலாவைப் பின்னுக்குத் தள்ளினீர்கள் என்பதே உண்மை! 

அன்றைய சூழலில் நீங்கள் சோகமான முகத்தோடு காட்சியோ, பேட்டியோ தந்தாலே போதுமானதாக இருந்தது. எதிர்த்தரப்பில் சசிகலாவுக்கு எதிராக அப்போதைய முதலமைச்சர் ஓ.பி.எஸ் போர்க்கொடி தூக்கியதுமே உங்களுடைய தடுமாற்றம் தொடங்கிவிட்டது. ‘சசிகலாவுக்குச் சிறைத்தண்டனை' என்ற அறிவிப்பு வந்த அதே நாளில், அ.தி.மு.க-வின் அறிவிக்கப்படாத தலைமைச் செயலகமாக(!) மாறியிருந்த ஜெ. சமாதியின் முன்பாக ஓ.பி.எஸ்-ஐ நீங்கள் சந்தித்த அன்றே, உங்களது சாயம் வெளுக்கத் தொடங்கியது. “உங்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன்" என்று சொன்ன ஓ.பி.எஸ்-ஐ உங்களுக்காகக் காத்திருக்கவைத்தீர்கள். `ஓ.பி.எஸ்ஸோடு இணைந்து செயல்படுவோம்' என்று கூறிய பிறகும், அவரோடு இணையாமல் தனிக்கட்சி ஆவர்த்தனம் செய்தீர்கள். ஜெயலலிதாவைப் போலவே பால்கனியில் நின்று கையாட்டுவது, தொண்டர்களைக் காக்கவைப்பது என நீங்கள் செய்த பந்தாக்கள், மக்களையும் உங்களை நம்பி வந்த தொண்டர்களையும் உங்கள் மீது வெறுப்படையவைத்தன. 

தீபா

அடுத்து, உங்களுடைய கணவர் மாதவனும் சீனுக்கு வந்தார். இருவரும் இணைந்து, குழந்தைகள் சொப்புச்சாமான் வைத்து விளையாடுவதுபோல ஒரு நாள் கூட்டாகப் பேட்டியளித்தீர்கள். மறுநாள் திடீரென தனித் தனியே பேட்டியளித்தீர்கள்; ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினீர்கள். அடுத்து, வாழும் எம்.ஜி.ஆரான(!) உங்கள் கணவரும் தனியாக ஒரு கட்சி தொடங்கினார். ஒரே வீட்டில் இரு கட்சி ஆதரவாளர்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஒரே வீட்டில் இரு கட்சிகளின் தலைவர்கள் கணவன் மனைவியாகக் குடும்பம் நடத்திய காமெடியைக் கண்டு தமிழகமே சிரித்தது.

தீபா மாதவன்

அடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனை நினைவு இல்லமாக்கும் பிரச்னை எழுந்தபோது, அந்த இல்லத்துக்கு உரிமை கொண்டாடினீர்கள். `அதை நினைவு இல்லமாக்க விட்டுத்தர மாட்டேன்' எனப் பேட்டி தந்தீர்கள். உடன் உங்கள் சகோதரர் தீபக்கும் இணைந்துகொண்டார். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை கோயிலாக நினைத்த அடிமட்டத் தொண்டர்களுக்கு, உங்களது எண்ணம் புரியத்தொடங்கியது. ஜெயலலிதா வாழ்ந்த வரை உங்களை அவரோடு சேர்த்துக்கொள்ளவே இல்லை. ஆனால், இப்போது அந்த இல்லத்துக்கு உரிமை கொண்டாடுகிறீர்கள். ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் எண்ணம் உண்மையிலேயே உங்கள் மனதில் இருந்திருந்தால், வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் முயற்சியை எதிர்த்திருக்க மாட்டீர்கள். ஜெயலலிதாவின் இல்லத்துக்கு உரிமை கொண்டாடிய நீங்கள், அவர் கட்டவேண்டிய 100 கோடி ரூபாய் அபராதத்தை அடைக்க முன்வரவில்லை என்பதையும் இந்தத் தமிழகம் கவனிக்கத் தவறவில்லை!

தீபா

இந்த ஓராண்டுக்குள் உங்கள் பேராசையால் ராஜ்ஜியத்தை ஆள நினைத்து பூஜ்ஜியத்தில் வந்து நிற்கிறீர்கள். வெற்று நெற்றி, குங்கும நெற்றியானது. இழுத்து வாரிய கூந்தலும், இழுத்துப் போத்திய சேலையும்கூட தற்போது மாறிவிட்டன. அடுத்து எத்தனை கெட்டப்புகள் போட்டாலும் தமிழக அரசியலில் உங்களுக்கான பதில் கெட்டவுட் என்பதைப் புரிந்துகொண்டு, ஜெயலலிதா சமாதியைச் சுற்றிச் சுற்றி அரசியல் செய்யாமல், ஒதுங்குங்கள் அல்லது தைரியமாக அடுத்த தேர்தலில் களமிறங்குங்கள். 

உங்களின் போன் வொயர் அறுந்துபோய் பல நாளாகிவிட்டதை மட்டும் மறவாதீர்கள்!

இப்படிக்கு,
தமிழக வாக்காளன்.


டிரெண்டிங் @ விகடன்