வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (07/12/2017)

கடைசி தொடர்பு:17:55 (07/12/2017)

நீதிமன்ற வளாகத்தில் காதல் ஜோடியைக் பதறவைத்த உறவுகள்! சினிமாவை விஞ்சிய சம்பவம்

கலப்புத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகளை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்ய முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, பாதுகாப்புக் கருதி நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த மருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவரும் புதுவை கரைமேடு கிராமத்தைச் சேர்ந்த எழில்ராஜனும் கல்லூரிப் படிக்கும்போது நீண்ட நாள்கள் நண்பர்களாகப் பழகி வந்துள்ளார்கள். பின்னர், அது காதலாக மாறியுள்ளது. இதையறிந்த தமிழ்ச்செல்வி வீட்டார் மற்றும் உறவினர்கள் இவர்களுடைய காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்ச்செல்வியின் செல்போனைப் பறித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியில் போகாமல் பார்த்துக்கொண்டனர். இந்நிலையில் இருவரும், டிசம்பர் 1-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இதனால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று என்னி  பாதுகாப்புக் கொடுக்கும்படி மாவட்ட எஸ்.பி விஜயகுமாரிடம் மனு கொடுத்திருந்தனர்.

இந்நிலையில், தமிழ்ச்செல்வியைக் கடத்திச் சென்றுவிட்டார்கள். அவரை கண்டுபிடித்து கொடுக்கும்படி வடலூர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வி குடும்பத்தார் புகார் கொடுத்திருந்தனர். இதனால், தமிழ்ச்செல்வி தன்னுடைய காதலன் எழில்ராஜனுடன் கடலூர் நீதிமன்றத்துக்கு வந்து, "தன்னை யாரும் கடத்தவில்லை. நானாகச் சென்று ஆசைப்பட்டுதான் திருமணம் செய்துகொண்டேன்" என்று கூறி நீதிபதியிடம் சரணடைந்தார். இதையறிந்த தமிழ்ச்செல்வி உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களோடு நீதிமன்ற வளாகத்துக்குள் புகுந்து கலப்புத் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிகளைத் தாக்கி கொலை முயற்சி செய்தனர். இதைக் கண்ட நீதிபதி, கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதனால், கொலை முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் நீதிமன்ற வளாகத்தைவிட்டு தப்பியோடினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து என்.டி. போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இந்த களேபரத்துக்கு மத்தியில் நீதிபதி, வாலிபர் 21 வயது நிரம்பாததால் திருமணத்தை ரத்து செய்கிறேன். பெண் தன் விருப்பப்படி செல்லலாம் என்று உத்தரவிட்டார்.

"நீதிமன்ற வளாகத்திலேயே இப்படியொரு கொடுமை என்றால், தமிழகத்தில் சட்ட - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள்" என்று வேதனை தெரிவித்தார்கள் சமூக ஆர்வலர்கள்.