வைகையைப் பராமரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - 4 மாவட்டக் கலெக்டர்களுக்கு நோட்டீஸ்

வைகை

மதுரை மாவட்டத்தை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "வைகை ஆறு மிகவும் பழைமையானது. இந்த ஆறு குறித்த தகவல்கள் தமிழ் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. அரசின் பராமரிப்பு குறைவால் வைகை ஆறு பயன்படுத்த இயலாத அளவு மாசடைந்து காணப்படுகிறது. வைகை ஆறு முழுவதும் குப்பைக் கூளங்களாலும் கழிவுகளாலும் கழிவுநீராலும் மாசடைந்து காணப்படுகிறது. அதோடு வைகை ஆற்றுப்பகுதியை ஆக்கிரமித்து பல்வேறு   கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, வைகை ஆறு கடந்துவரும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களிலும் வைகை ஆற்றைத் தூய்மைப்படுத்த உத்தரவிட வேண்டும். குப்பைக் கழிவுகளைக் கொட்டுவோருக்கு கடும் தண்டனைகள் வழங்க உத்தரவிட வேண்டும். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் கழிவுகளைக் கொட்டுவோர் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 32 லட்சத்து 60 ஆயிரத்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் 14 லட்சத்து 60 ஆயிரத்து 400 ரூபாய் வசூலிக்கப்பட உள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்றுக்கொண்ட நீதிபதிகள், வைகை ஆற்றைப் பராமரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!