மாணவர்களை ஊக்கப்படுத்தும் அஞ்சல்துறை! அசத்திய அரசுப் பள்ளி மாணவி

அஞ்சல்துறை

இந்திய தேர்தல் ஆணையம் , அஞ்சல்துறை உள்ளிட்ட பல துறைகள்  மாணவர்களிடையே ஊக்கத்தையும் விழிப்பு உணர்வு கருத்துகளையும் கொண்டு சேர்க்க மத்திய அரசு  பல்வேறு வகையான போட்டிகள் நடத்தி சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கிவருகிறது. அஞ்சல் துறையில் பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்திய நிலையில் மதுரை மண்டல அளவிலான போட்டியில் மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த பி.வெங்கடேஸ்வரி என்ற பத்தாம் வகுப்பு மாணவி வெற்றி பெற்றுள்ளார்.

அதைப் பெருமை படுத்தும்விதமாக அஞ்சல் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாக வந்து வழிபாட்டுப் பாடல் கூட்டம் முடிந்த பிறகு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கினர். இது தொடர்பாக ஆசிரியர் சூரியகுமார் மற்றும் தலைமை ஆசிரியர் டெஸ்சி ராணி கூறுகையில்" எங்கள் பள்ளி மாணவி மண்டல அளவில் கட்டுரைப் போட்டியில் வென்றது பெருமைக்குரிய விஷயம். தற்போதெல்லாம் தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்தான் அனைத்துத்துறையிலும் முன்னோடியாகத் திகழ்கின்றன. குறிப்பாக, கிராமப்புற மாணவர்கள்தான் கடுமையான சூழலை எதிர்கொண்டு முன்னேறி வருகின்றனர். அஞ்சல்துறை அதிகாரிகள் எங்கள் பள்ளிக்கு நேரடியாக பாராட்டியது மாணவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது'' எனத் தெரிவித்தனர்.

மாணவிகளுக்கு இந்திய அஞ்சல் துறை நடத்திய சேவைகள் குறித்த மதுரை மண்டல விழிப்பு உணர்வுக் கட்டுரைப் போட்டியில் மாணவி வெங்கடேஸ்வரி முதலிடம் பெற்றதற்கு கௌரவப்படுத்தும் வகையில் மாணவியின் புகைப்படத்தை 5 ரூபாய் அஞ்சல் தலையில் வெளியிட்டனர். மேலும், மாணவிக்கு முதல் பரிசு ஆயிரம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழை அஞ்சல் அலுவலர்கள் சரவணன், அனுபிரபா, மணிவேல் ஆகியோர் வழங்கினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!