வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (07/12/2017)

கடைசி தொடர்பு:19:40 (07/12/2017)

சிக்கவைத்த ஆயிரம் ரூபாய்! - சார்பதிவாளருக்கு ஓராண்டு சிறை

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் சார் பதிவாளராகப் பணியாற்றியவர் ராமநாதன். இவர் மீது 2010-ம் ஆண்டு லஞ்ச வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கும்பகோணம் தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருவிடைமருதூர் அருகேயுள்ள கீழமருத்துவக்குடியைச் சேர்ந்த பிரபாகர். இவர் தனது கிரயப்பத்திரத்தை, திருவிடைமருதூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். இதன் ஆவணத்தை வழங்க, சார்பதிவாளர் ராமநாதன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக, லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் பிரபாகர் புகார் அளித்தார். இதனால் சார்பதிவாளர் ராமநாதனையும் இவருக்கு உடந்தையாக இருந்த பத்திர எழுத்தர் பசுபதியையும் லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். கும்பகோணம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில் சார்பதிவாளர் ராமநாதனுக்கும் பத்திரப்பதிவு எழுத்தர் பசுபதிக்கும் தலா ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.