தொப்பி சின்னத்துக்குப் போட்டிபோடும் மூன்று கட்சிகள்! தினகரனுக்கு?

களைகட்டிவரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. 

rk nagar
 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. தீபா விஷால் உள்ளிட்ட 73 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 13 பேர் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வேட்பாளர் பட்டியல்படி அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் என 59 பேர் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க-வின் மருதுகணேஷ், பா.ஜ.க சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், சுயேச்சையாகப் போட்டியிடும் டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடலாம் என்று இருந்தார். காரணம் தொப்பி சின்னத்தை வைத்து தினகரன் ஏற்கெனவே பிரசாரம் மேற்கொண்டதுதான். ஆனால், தினகரனுக்குத் தொப்பி சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை. தொப்பி சின்னத்துக்கு மூன்று கட்சிகள் போட்டிப்போடுகின்றன. `நமது கொங்கு முன்னேற்றக் கழகம்’, `தேசிய மக்கள் சக்தி கட்சி’, எழுச்சி தமிழர் முன்னேற்ற கழகம்’ என மூன்று கட்சிகள் தொப்பி சின்னம் வேண்டும் என்று கோரியுள்ளன.

dinakaran
 

அரசியல் கட்சிகள் தொப்பி சின்னத்தைக் கோரியுள்ளதால் சுயேச்சை வேட்பாளர் தினகரனுக்குத் தொப்பி சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால், தினகரனுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. `தொப்பி சின்னம் கிடைத்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கண்டிப்பாக 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றிபெறுவார்’ என்று திவாகரன் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் தொப்பி சின்னம் ’நமது கொங்கு முன்னேற்றக் கழகம்’ வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!