வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (07/12/2017)

கடைசி தொடர்பு:19:27 (07/12/2017)

28 ஆடுகள், உரிமையாளரின் உயிரைப் பறித்த மின்னல் வேக வாகனம்!

ராமநாதபுரம் அருகே குமியங்குளம் பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீழச்செம்பட்டி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக ஆடுகளுக்கு கூடாரம் அமைத்து தங்கவைத்து உசிலம்பட்டி மற்றும் தேனி, ஆண்டிபட்டி பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு ரெங்கசாமி மற்றும் அவரின் உதவியாளர் திம்மரசநாயக்கனூரைச் சேர்ந்த அர்ச்சுணன் என்பவருடன் ஆண்டிபட்டி பகுதிக்கு ஆடுகளை மேய்ப்பதற்காக உசிலம்பட்டி - திருமங்கலம் சாலை வழியாகச் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆடுகளை நடைபயணமாகக் கொண்டு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது வடுகபட்டி காலனி அருகே வரும்போது எதிர்பாராத விதமாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஆடுகள் மற்றும் ரங்கசாமி மீது பலமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் 28 ஆடுகள் மற்றும் ரங்கசாமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து உடன் வந்த அர்ச்சுணன் அளித்த தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து ரங்கசாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.