வெளியிடப்பட்ட நேரம்: 21:59 (07/12/2017)

கடைசி தொடர்பு:21:59 (07/12/2017)

பொறித்த மீன், இட்லி சாப்பிட்ட செவிலியர் மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்!

 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் செவிலியர் பயிற்சி கல்லூரி விடுதியில் திடீரென 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி மயக்கம் அடைந்து கீழே விழுந்ததையடுத்து சக மாணவி கூட்டமாகக் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் செவிலியர் விடுதி இரும்பாலை செல்லும் வழியில் உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட செவிலியர் மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். இந்த மாணவிகளுக்குத்தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதையடுத்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அவர்களை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக மருத்துவமனை நிர்வாகம் வளாகத்தில் உள்ள கருத்தரங்கத்தில் வைத்து சிகிச்சை அளித்தார்கள். மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி மாணவிகளிடம் கேட்டதற்கு, ''விடுதியில் நேற்று மதியம் பொறித்த மீனும், குழம்போடு சோறும் சாப்பிட்டோம். இரவு இட்லி சாப்பிட்டோம். மற்றபடி எதுவும் சாப்பிடவில்லை. இந்நிலையில் இன்று காலை திடீரென 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு விடுதியிலேயே கீழே விழுந்தார்கள். உடனே விடுதியிலிருந்த வாகனத்தை எடுத்துக்கொண்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோம்.

இதில் 35க்கும் மேற்பட்ட மாணவிகள் குணமாகி விட்டார்கள். 15 மாணவிகள் மயக்க நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்கள். டாக்டர்களிடம் விசாரித்தபோது புட் பாயிஷன் என்கிறார்கள். நேற்று வழங்கப்பட்ட மீன் பழைய மீனாக இருக்கக் கூடும் எனக் கருதுகிறோம். இன்னும் அதற்கான சரியான காரணங்கள் தெரியவில்லை'' என்றனர்.

இதுப்பற்றி மருத்துவமனையில் விசாரித்த போது, '' உணவு ஒவ்வாமையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி பெரிய சம்பவம் எதுவும் கிடையாது. 30க்கும் மேற்பட்ட மாணவிகள் குணமாகிவிட்டார்கள். சிலருக்குச் சற்று மயக்கம் இருக்கிறது. அதுவும் சற்று நேரத்தில் குணமாகி விடும்'' என்றார்கள்.