`எப்பம்மா அப்பா வருவாரு' - ஒகி புயலால் காணாமல்போன தந்தையைத் தேடும் குழந்தைகள்

கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், ஒகி புயலால் இன்னும் கரை திரும்பாததால் கண்ணீரோடு கதறிக்கொண்டிருக்கிறார்கள் கடலூர் மீனவக் குடும்பங்கள்.

குமரி மீனவர்களைப்போல், கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, சின்னூர், பரங்கிப்பேட்டை போன்ற மீனவக் கிராமங்களிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 55 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் ஒரே படகில் சென்றுள்ளனர். அதில் தினேஷ், அன்பு இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பிகள். அதனால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இவர்களை மீட்க மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புலம்புகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

தினேஷின் மனைவி ரஞ்சிதா, "அவர் கடலுக்குப் போயி 13 நாள் ஆகுது. போன இரண்டு நாள்கள் வரை நான் பத்திரமா இருக்கிறேன். நீங்க பத்திரமா இருங்கன்னு என்னிடம் செல்போனில் பேசிகிட்டு இருந்தார். அதுக்கப்புறம் அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அவர் போன படகு புயலில் சிக்கி ஒடைஞ்சிடுச்சுன்னு கரைக்கு வந்தவங்க சொல்றாங்க. அதைக் கேட்டதிலிருந்து எங்களுக்குத் தூக்கமே இல்லை. இந்த இரண்டு கைக்குழந்தைகளும் `அப்பா எப்பம்மா வருவாரு'ன்னு கேட்டுகிட்டே இருக்கு. அதனால கடலையே வெறிச்சு வெறிச்சு பார்த்துக் கிடக்கிறோம். அவரை கண்டுபிடிச்சு கொடுங்கன்னு கலெக்டர்கிட்ட மனு கொடுத்திருக்கிறோம். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் இல்லை. அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஐயப்பன்தான் எங்களை வந்து பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு போயிருக்கார். என்  கணவர் எங்க இருக்கார் என்று தெரிந்தாலேபோதும், குரலை ஒருதரம் கேட்டாலே போதும்"  என்று தலையிலடித்துக்கொண்டு கதறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!