வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (07/12/2017)

கடைசி தொடர்பு:21:00 (07/12/2017)

`நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' - விவசாயிகளுக்கு அறிவுரை

2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் பெரும் நோக்கத்தோடு நவீனத் தொழில்நுட்பங்கள் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என 5வது அறிவியல் ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

                             
  அரியலூர் மாவட்டம் சோழமாதேவியில் உள்ள இந்திய வேளாண்மை அறிவியல் மையத்தில் ஐந்தாவது அறிவியல் ஆலோசனைக்கூட்டம் நேற்று தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய வேளாண் அறிவியல் மையத்தின் இயக்குநர் பிரசாத் கலந்துகொண்டு பேசினார். இந்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய வேணாண்மை அறிவியல் மையம் தமிழகத்தில் 30 இடங்களில் செயல்பட்டு வருகின்றது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கப்படுகின்றது. முக்கியமாக மண்பரிசோதனை செய்து மண் வளத்திற்கேற்ற பயிர்கள் சாகுபடி செய்வது, இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பது, ரசாயன உரங்களைத் தவிர்ப்பது. விவசாயத்தில் தண்ணீர் செலவைக் குறைக்கும் வகையில் பிரதமமந்திரியின் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர்ப் பாசன முறைகளைக் கையாள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அனைத்து விவசாயிகளும் பிரதமமந்திரியின் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இந்திய வேளாண்மை அறிவியல் மையம் வேளாண்மைத் துறையுடன் இணைந்து விவசாயிகளின் நிலங்களின் மண்மாதிரிகளை ஆய்வு செய்து பத்தாயிரம் மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் வேலைவாய்ப்பிற்காக நகரத்திற்குள் இடம் பெயர்வதைத் தடுக்கும் வகையில் கிராமப்புற இளைஞர்களுக்குத் திறன்மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களுக்குச் சுய தொழில்தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்தில் 50சதவீத பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டு விவசாய பொருள்களை பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களும் வழங்கப்பட உள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் மாநில அரசுடன் இணைந்து மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விவசாயத்தில் நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் 2022க்குள் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கச் செய்வது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகக் கூறினார். கூட்டத்தில் சோழமாதேவி இந்திய வேளாண் அறிவியல் மைய தலைவர் ரத்தினசபாபதி உள்ளிட்ட வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.