`இந்தச் சம்பளத்தை வைத்து என்ன செய்ய முடியும்' - பொங்கி எழுந்த தூய்மைப் பணியாளர்கள்


சேலம் அரசு மருத்துவமனையில் பத்மாவதி ஏஜென்ஸியின் கீழ் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களான தூய்மைப் பணியாளர்களும், பாதுகாவலர்களும் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை கலெக்டர் மற்றும் தொழிலாளர் நலத்துறை தலையிட்டு சமாதானம் செய்தார்கள்.

இதுபற்றி மருத்துவமனையில் தூய்மை பணி செய்யும் ரேவதி, ''சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் பத்மாவதி ஏஜென்ஸி மூலம் ஒப்பந்தப் பணியாளர்கள் சுமார் 450 பேர் வேலை பார்க்கிறோம். எங்களை பத்மாவதி ஏஜென்ஸியின் மேலாளர் சின்னச்சாமி கொத்தடிமைகளைப் போல நடத்துகிறார்கள். வாடி, போடி என ஒருமையில் கூப்பிடுகிறார். முதலில் எங்களை மரியாதையாக நடத்த வேண்டும்.


எங்களுக்கு வருடத்தில் ஒரு நாள் கூட விடுமுறை கிடையாது. பொதுமக்களின் நோய்களைக் காக்கின்ற எங்களுக்கு ஒரு நோய் வந்தால் கூட விடுமுறை எடுக்க முடியாது. அப்படி ஒரு நாள் விடுமுறை எடுத்தால் கூட அன்று சம்பளம் பிடித்துக்கொள்ளுகிறார்கள். எங்களுக்கு 4 வருடமாக 6500 மட்டுமே சம்பளம் போட்டிருக்கிறார்கள். அதிலும் பி.எஃப்., இ.எஸ்.ஐ., என 1300 பிடித்துக்கொண்டு 5,200 கொடுக்கிறார்கள். இந்தச் சம்பளத்தை வைத்து என்ன செய்ய முடியும். வயிற்றுக் கொடுமைக்கு இந்த வேலைக்கு வருகிறோம்.  பி.எஃப்., அலுவலகத்திற்குச் சென்று எங்களுடைய பி.எஃப்., நம்பரைக் கொடுத்தால் இது போலியான நம்பர் என்று சொல்லுகிறார்கள். போலியாக 50க்கும் மேற்பட்டவர்களுடைய பெயர்களைப் போட்டு அவர்களுடைய முழுச் சம்பளத்தையும் எடுத்துக் கொள்ளுகிறார்கள்'' என்று குமுறுகிறார்கள். அரசு மருத்துவமனைக்கு அருகிலேயே இருக்கும் தொழிலாளர் நலத்துறை அலுவலர் கோடீஸ்வரி, ''இதுபற்றியெல்லம் எனக்கு எதுவும் தெரியாது. தற்போதுதான் என் கவனத்திற்கு வந்திருக்கிறது. நடவடிக்கை எடுக்கிறேன்'' என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லுகிறார்.

இந்த பத்மாவதி ஏஜென்ஸி ஆந்திராவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒப்பந்த நிறுவனம். இது தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவின் மகன் விவேக் உடையது என்று கூறப்படுகிறது. இவர்கள் தமிழகம் முழுவதும் பல அரசு மருத்துவமனையில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பணிக்கான ஒப்பந்தங்களை எடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒப்பந்த விதிமுறைகளைச் சிறிதும் கடைபிடிக்கவில்லை. இதைக் கண்காணிக்க வேண்டிய அரசு ஆர்.கே.நகரில் பிரசாரத்தைப் பற்றியே கவனம் செலுத்தி வருகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!