“புயல்கூட எங்களை அழிக்கலைங்க... தமிழக அரசுதான் எங்களை அழிக்குது!” - துயரத்தில் மீனவப் பெண்கள்

வம்பர் 30-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உக்கிர ஆட்டம் போட்ட ஒகி புயல், தமிழகத்தைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தியுள்ளது.

குமரி மாவட்டத்தில் 48 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில், மீன் பிடிக்கச் சென்ற 3,000 மீனவர்கள் ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் இறந்துவிட்டனர். பலர் உணவு, குடிக்கத் தண்ணீரில்லாமல் நடுக்கடலில் தத்தளித்தனர். அவர்களை மீட்க, அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, மீனவர்களின் ஆதங்கம். இதுகுறித்து, கண்ணீருக்கிடையே சிலர் பேசினர்.

சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த சுகி, ''29-ம் தேதி மதியம் மூன்று மணிக்குப் பிறகுதான் புயல் வரப்போகும் விஷயத்தையே அறிவிச்சாங்க. காலையிலேயே கடலுக்குப் போயிட்டவங்களுக்கு இதை எப்படிச் சொல்ல முடியும்? ஒயர்லெஸ், செல்போன் சிக்னல் எதுவும் கிடைக்கலை. கரைக்குத் திரும்பிட்டிருந்த மீனவர்களையும் புயல் தூரமாகக் கொண்டுபோயிடுச்சு.சுகி - மீனவப் பெண்

கடலிலே தத்தளிச்சுட்டு இருந்தாங்க. நம்ம நேவி, அவங்களுக்குச் சாப்பாடு, தண்ணீர்கூட கொடுக்கலை. 'சீக்கிரம் கரைக்குப் போயிடுங்க'னுதான் சொல்லியிருக்காங்க. புயலடிச்சுட்டு இருக்கும்போது எப்படித் திரும்பி வரமுடியும். மத்திய அமைச்சர் பொன்னாரையும் காணலை. எங்களுக்கு நிவாரணம் தேவையில்லைங்க. ஒருத்தன் செத்து ஏழு வருஷத்துக்கு அப்புறம் அவன் குடும்பத்துக்குக் கொடுக்கிற நிவாரணத்தால் என்ன பிரயோஜனம்? கட்சிக்காரங்க ஆறுதலும் தேவையில்லை. கேரள முதல்வர், பினராயி விஜயன் புயல் தகவலை முன்கூட்டியே மீனவர்களுக்குக் கொடுக்காததுக்கு வருத்தம் தெரிவிக்கிறார்.

இங்கே, அரசியல்வாதிகளும் அரசும் தூக்க மாத்திரையைப் போட்டு தூங்கிட்டிருக்குபோல. நாகர்கோவில் வரைக்கும் வந்த துணை முதல்வர் ஓ.பி.எஸ், மீனவர்களைப் பார்க்க வரலை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழான்னு பல கோடி செலவழிச்சுக் கொண்டாடுறாங்க. எங்களைக் கண்டுக்க யாருமில்லை. கடலுக்குள் இருக்கும் மீனவர்களைக் காப்பாற்ற வக்கில்லாமல் நிற்குது அரசு. 15 நாள்களாக கடலுக்குள்ளே சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் எங்க ஆளுங்க கிடக்கிறாங்க. இணையம் துறைமுகத்தை நாங்கள் எதிர்க்கிறதால், பொன்னார் எங்களைக் கண்டுக்கறதே இல்லே. புயல்கூட எங்களை அழிக்கலைங்க. இந்தப் பாழாப்போன அரசுதான் அழிக்குது. என் அண்ணனோடு சேர்ந்து, 11 சொந்தக்காரங்க கடலுல மிதந்துட்டிருக்காங்க'' என்று கதறுகிறார்.

ஷைனி மீனவப் பெண்கள்

“கடலுக்குள் 40 பேர் செத்துப்போயிருக்க, நான்கு பேர் உடலை மட்டுமே கொண்டுவந்திருக்காங்க. அதிலும், எங்க சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த யாரையும் கொண்டுவரலை. ஏழு நாளாக தொண்டையில் கஞ்சிகூட இறங்காமல் கரையிலேயே காத்திருக்கோம். எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்குமா? ஒருதடவை 'குமரி மாவட்ட மக்கள் படித்த முட்டாள்கள்'னு ஜெயலலிதா சொன்னாங்களாம். அது உண்மைதான். அரசு வேலைகள் எதிலும் நாங்க இல்லை. நல்லா படிச்ச பிள்ளைகளும் கடலில்தான் பிழைப்பு நடத்தறாங்க. என் வீட்டிலிருந்து போன நாலு பேர் கடல்ல இருக்காங்க. அவங்க கரைக்குத் திரும்புவாங்களா?'' எனக் கேட்கிறார் ஷைனி. பதில்தான் யாரிடமும் இல்லை. 

ஜீஜா - மீனவப் பெண்

“எங்க படகில் 12 பேர். அவங்களைக் காப்பாற்றப்போன நேவி, 70 நாட்டிகல் வரைக்கும்தான் போகமுடியும்னு சொல்லுது. கேரள அரசு, அவங்க மீனவர்களைக் காப்பாற்ற போராடுது. தமிழக அரசால் குடிக்கத் தண்ணீர் கொடுக்கவும் துப்பில்லாமல் இருக்கு. எங்களுக்கு ஒரு பாதுகாப்பும் இல்லை. ஆனால், அதிகாரிகளுக்கு 700 போலீஸ் பாதுகாப்பு'' என்கிறார், கணவனைக் காணமல் தவிக்கும் தூத்தூர் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஜீஜா. 

 

பிரின்சி - மீனவப் பெண்

“நேவி கப்பலு என்னிக்குமே மீனவர்களைக் காப்பாத்தினதா சரித்திரமே இல்லீங்க. 50 நாட்டிகல் தாண்டிபோகவே யோசிக்கிறாங்க. பொன்னார் வேடிக்கைப் பார்த்துட்டிருக்கார். மத்த அரசியல்வாதிங்க ஏதோ கடமைக்குப் பேசிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறாங்க. சுப உதயகுமாரும் வைகோவும் எங்களுக்காகப் போராடிட்டு இருக்காங்க. அரசு எங்களுக்குப் பணம், காசு கொடுக்க வேண்டாங்க. எங்க ஆளுங்களை உயிரோடு மீட்டுக் கொடுத்தால் போதுங்க. மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் ஓ.பி.எஸ், எடப்பாடி எல்லாம் நாங்க அழறதை லைவ்வில் பார்த்துட்டிருக்காங்க அவ்வளவுதான். கடலில் இருக்கிற எங்க ஆளுங்க வர்ற வரைக்கும் எங்க பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டோம்'' என்கிறார் தூத்தூர் சின்னத்துறையைச் சேர்ந்த பிரின்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!