குமரியில் தொடரும் போராட்டம் சென்னையில் எதிரொலி...கோட்டையை முற்றுகையிடப் போகிறார்களா மீனவர்கள்?

மீனவர்

 

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று ஒகி புயலால் பாதிக்கப்பட்டு தகவல்தொடர்பில் வராத கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி அம்மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. அவர்களுக்கு ஆதரவாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 25 மீனவ கிராமத்தினர் நாளை சென்னையில் கோட்டையை நோக்கி போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரம் வீசிய ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்டுத்தர வலியுறுத்தி, ஏழு நாள்களாக அங்கு போராட்டங்கள் நடந்துவருகின்றன. குமரி மாவட்டத்தின்  எட்டு கிராமங்களைச் சேர்ந்த 1,159 மீனவர்களின் கதி என்னவென்று தெரியாமல், லட்சக்கணக்கானோர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தமிழக அரசின் தரப்பில் உரிய மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கொந்தளிப்புடன் பேசுகின்றனர். பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அரசின் நடவடிக்கையில் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

அரசின் மெத்தனம் தொடருவதாகக் குற்றம்சாட்டி, தகவல்தொடர்பில் வராத மீனவர்களையும் மீட்கக்கோரி, மார்த்தாண்டந்துறை, தூத்தூர், வல்லவிளை உட்பட 8 கிராமங்களைச் சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் இன்று காலை குழித்துறை ரயில்நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாகச் செல்லவேண்டிய ரயில்களின் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையொட்டி தெற்கு ரயில்வே நிர்வாகமானது ஏழு ரயில்சேவைகளை நிறுத்திவைத்துள்ளது. 

காலையில் தொடங்கிய போராட்டம் மதியம், பிற்பகல் எனத் தொடர்ந்தநிலையில் மழை பெய்தது. கொட்டிய மழையிலும் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர். மாலை 5 மணிவரையில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்குகூட அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை. 

மீனவர்

பச்சை தமிழகம் கட்சியின் தலைவர் சுப.உதயகுமாரனும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். நிலவரம் குறித்து அவரிடம் கேட்டபோது,“ கடந்த 30ஆம் தேதி ஒகி புயல் தாக்கியதில் நீரோடி, மார்த்தாண்டன் துறை, வல்லவிளை, இரவிபுத்தந்துறை, சின்னத்துறை, தூத்தூர், பூத்துறை, இரயுமன்துறை ஆகிய எட்டு கிராமங்களைச் சேர்ந்த 1,113 மீனவர்களைப் பற்றிய தகவல் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். பாதிப்புகளை முதலமைச்சர் இதுவரை வந்து பார்க்கவில்லை. துணை முதலமைச்சரும் மூன்று அமைச்சர்கள் மட்டுமே வந்தனர். அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கவில்லை. தூத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் பிரதிநிதிகளை மட்டும் பார்த்துவிட்டுப் போய்விட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்கள் செல்லவே இல்லை. ஆனால் அண்டை மாநிலமான கேரளத்திலோ பேரிடர்க் கட்டுப்பாட்டு அறைக்குள் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் போய் உட்கார்ந்துகொண்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிடுகிறார். இறந்துபோன மீனவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அன்றாடச் செலவுக்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மக்களைப் பொறுத்தவரை முதலமைச்சர் வந்து நிலைமையைப் பார்க்கவேண்டும் என வலியுறுத்துகின்றனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக கோடிகோடியாக இறைக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுப்பதற்குப் பணம் இல்லையா? முதலமைச்சர் என்பவர் மக்கள் பிரதிநிதிதானே..? பாதிக்கப்பட்ட மக்களை வந்துபார்ப்பதற்கு அவருக்கு என்ன பிரச்னை? பயமா? இது நேர்மையான செயலாக இல்லை. மக்களின் கோரிக்கையைப் பொறுத்தவரை, இப்படியான சூழலில் மீனவர்கள் காணாமல்போனால் அவர்களை மீட்பதற்கு வசதியாக கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கவேண்டும். இப்போதைய வசதிப்படி பத்து நாள்களுக்குப் பிறகு தேடுதல் நடவடிக்கையைச் செய்வதால் என்ன பலன்? 150 கடல் மைல் தொலைவுவரை தேடினால்தான் காணாமல்போனவர்களை மீட்கமுடியும். ஆனால் 40 கடல்மைல்வரை மட்டும் தேடுகிறார்கள். எங்களால் தேடமுடியவில்லை என்கிறார்கள்; மீனவர்களோ எங்களைக் கூட்டிச்செல்லுங்கள் என்கிறார்கள். அவர்கள் சொல்வதில் எந்த அநியாயமும் இருப்பதாக எனக்குப் படவில்லை” என்று உதயகுமாரன் கூறினார். 

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் முதல் திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம், அயோத்திக்குப்பம், நடுக்குப்பம், மயிலாப்பூர் நொச்சிக்குப்பம், நொச்சிநகர், டூமிங் குப்பம், செல்வராஜ் கிராமம், பவானி குப்பம், நம்பிக்கை நகர், முள்ளிமாநகர, சீனிவாசபுரம், ஊரூர் குப்பம், ஆல்காட் குப்பம், ஓடைக்குப்பம், திருவான்மியூர் குப்பம்வரையிலான 14 கிராமங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கொட்டிவாக்கம், பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, பெரிய நீலாங்கரை, சின்னாண்டிக்குப்பம், ஈஞ்சம்பாக்கம், பனையூர்குப்பம், நயினார்குப்பம், கானத்தூர் ரெட்டிக்குப்பம், கரிக்காட்டுக்குப்பம், கோவளம் ஆகிய 11 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நாளை காலையில் சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகைப்போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளனர். 

சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் மீனவ கிராம சபை நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகில் உள்ள நொச்சிக்குப்பம் கிராமத்திலிருந்து நாளை காலை 10.30 மணியளவில் பேரணியாகப் புறப்பட்டு, கோட்டையை நோக்கிச் செல்லவுள்ளதாகப் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!