வெளியிடப்பட்ட நேரம்: 23:45 (07/12/2017)

கடைசி தொடர்பு:08:17 (08/12/2017)

”எந்த நேரத்திலும் எங்க வீடுகள் இடிக்கப்பட்டு, துரத்திவிடப்படலாம்!” - போராட்டத்தில் குதித்த மக்கள்

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் கல்யாணி கிரி படையாச்சியூர் கிராமத்தில் வசிக்கும் 30 தலித் குடும்பத்தினரின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆதிக்க வர்க்கத்தை எதிர்த்தும், அவர்களுக்குத் துணை போகும் வகையில் செயல்படும் சேலம் மாவட்ட வருவாய் துறையைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிதம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரதத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட துணை அமைப்பாளர் ராமகிருஷ்ணன், படையாச்சினூர் பெத்தநாயக்கன்பாளையம் ஊர் தலைவர் மாணிக்கம், விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்த மாசி முருகன், அரசியல் அதிகாரம் பத்திரிகையைச் சேர்ந்த வாணி செல்லம்மாள் உட்பட 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய விடுதலைச் சிறுத்தைகளின் நில உரிமை மீட்பு இயக்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் அம்மாசி, ''சேலம் பெத்தநாயக்கன்பாளையம் கல்யாணகிரி படையாச்சியூர் கிராமத்தில் 30 தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 200 ஆண்டுகளாக வசித்துவருகிறோம். எங்களுக்கு 1991-ல் புதிய சர்வே எண் 151/1 முதல் 39 வரை கிராம நத்தம் நில வகைபாடு செய்து பட்டா வழங்கினார்கள். அதையடுத்து வீட்டு வரி, குடும்ப அட்டை, மின் இணைப்பு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை கொடுக்கப்பட்டது. அதையடுத்து எங்க சக்திக்கு உண்டான அளவு வீடுகளைக் கட்டி வாழ்ந்துவருகிறோம்.

ஆனால் ஆதிக்க சமுதாயத்தைச் சேர்ந்த சாந்தானந்தம் மகன் வெற்றிச் செல்வம் என்பவர் எங்கள் கிராமத்தின் அருகே 12 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை 2008-ல் வாங்கினார். வெற்றிச்செல்வன் அறுவை சிகிச்சை மருத்துவர். இவர் அதிகார பலத்தாலும், பண பலத்தாலும் வருவாய்த் துறை அதிகாரிகளின் துணைகொண்டு மறைமுகமாக எங்களுடைய பட்டாவை ரத்துசெய்து ஆணை பெற்று வந்துவிட்டார்.

அதையடுத்து, எங்களைக் காலி செய்யச் சொல்லி அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். பொக்லைன் இயந்திரம் கொண்டு எங்கள் வீடுகளை இடிப்பதற்கு முயற்சி செய்துவருகிறார். இவருடைய உறவினர் பஞ்சாயத்து தலைவராக இருப்பதால், தற்போது எங்க வீடுகளுக்கு வீட்டுவரி எங்களிடம் வாங்குவதில்லை. எந்த நேரத்திலும் எங்கள் வீடுகள் இடுக்கப்பட்டு எங்களைத் துரத்தி விடும் சூழ்நிலை இருக்கிறது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க