வெளியிடப்பட்ட நேரம்: 22:20 (07/12/2017)

கடைசி தொடர்பு:07:35 (08/12/2017)

’பட்டியலின மாணவர்களின் கல்விக்காக அரசு அளித்த ரூ.70 கோடி எங்கே?’ அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ தகவல்

கோவையில், பட்டியலின மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக் கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, மாணவர்களிடமும் சில தனியார் கல்லூரிகள் கட்டணம் வசூலித்த அதிர்ச்சி சம்பவம் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது.

சமூக நீதிக் கட்சியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், கோவையில் கடந்த 2016-17 கல்வியாண்டில் கல்லூரி வாரியாக எந்தெந்தக் கல்லூரிகளில் எத்தனை பட்டியிலின மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது. கல்விக் கட்டணம் செலுத்தி, அதிகக் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள்மீது ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா. அவ்வாறு பெற்ற புகார்களின்மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது அல்லது எடுக்கப்படும் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக சம்பந்தப்பட்ட துறைகளிடம் கேள்வி எழுப்பியிருந்தார். 

பன்னீர்செல்வம்அவரின் கேள்விக்கு வந்த பதிலில், 2016-17 கல்வி ஆண்டில் 300 தனியார் கல்லூரிகள், அரசிடமிருந்து 70 கோடி ரூபாயைப் பெற்றுவிட்டு, மாணவர்களிடமும் கட்டணம் வசூலித்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, கல்லூரி வாரியாக, எந்ததெந்த கல்லூரி, எவ்வளவு தொகை பெற்றுள்ளன என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பன்னீர்செல்வத்திடம் பேசினோம், "ஒவ்வொரு ஆண்டும், பட்டியலின மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விக் கட்டணம் குறித்து சுவரொட்டி, துண்டறிக்கை மூலமாக பிரசாரம் செய்துவருகிறோம். ஆனால், அரசோ மாணவர்களிடம் இதுகுறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதில்லை. பொறியியல் கல்லூரிகள் மிகப்பெரிய வணிகமாகப் பட்டியிலின மாணவர்களைப் பயன்படுத்திவருகின்றனர். குறிப்பாக, கோவையில் உள்ள பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்று, இப்படி ஒரு திட்டம் இருப்பதையே மாணவர்களிடம் சொல்லாமல், கட்டணத்தை மட்டும் வசூலித்துள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையின்போதே, கல்விக் கட்டணத்தை, வங்கிக் கணக்கில் செலுத்தி, பட்டியலின மாணவர்களின் கல்வி பாதியில் நின்றுபோவதைத் தடுக்க வேண்டும்" என்றார்.