'ஹெல்மெட்டுக்கு வழக்குப் போடும் அரசு அணை உடைந்தால் வழக்குப் போடாதா?' போராட்டத்தில் கலகலத்த ஜி.கே.மணி

கே.ஆர்.பி அணையைப் பராமரிக்காத அதிகாரிகளைக் கண்டித்து, பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது., ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. மாநிலத் தவைவர் ஜி.கே.மணி பங்கேற்று பேசுகையில், ''கே.ஆர்.பி அணை கிருஷ்ணகிரி, தருமபுரி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த அணையின் முதல் மதகு உடைந்து தண்ணீர் முழுவதும் வீணாகி உள்ளது. இதனால் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு நாற்றுவிட்ட விவசாயிகள், தண்ணீருக்காகக் காத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இன்னும் இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் உள்ள மக்களுக்குக் குடிநீர் பிரச்னையும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

தமிழக அரசுக்கு, கிருஷ்ணகிரி அணை குறித்து அக்கறை இல்லை. ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால் வழக்குப் பதிவு செய்யும் இந்த அரசு, இவ்வளவு பெரிய மதகு உடைந்ததற்கு, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடைந்த மதகின் முன்பு தற்காலிக கதவைப் பொருத்தி வீணாகிப் போன தண்ணீரைச் சேமித்திருக்கலாம். அதற்கு நம்மிடம் தொழில்நுட்ப வசதி இல்லையா?. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி ஏற்பட்டபோதும், இந்த அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு வீணாகும் தண்ணீரை எண்ணேகொல்புதூர் மற்றும் தும்பலஅள்ளி கால்வாய்த் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் சேமித்திருக்கலாம். அந்தத் திட்டங்களை நிறைவேற்றாததால் தண்ணீர் வீணாகி கடலில் கலந்துள்ளது. 

தமிழக அரசுக்கு பா.ம.க. சார்பில் கோரிக்கையை வைக்கிறேன். அணையின் மதகு உடைய என்ன காரணம்?. அணையைப் பராமரிக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது?. அணையிலிருந்து எவ்வளவு தண்ணீர் வெளியேறியுள்ளது?. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எத்தனை பேர்?. என்பதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 8 நாள்களைக் கடந்தும் உடைந்த மதகைச் சரி செய்யவில்லை. மதகை உடனே சரி செய்து தண்ணீரை தேக்கவில்லை என்றால், அடுத்தகட்டமாகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்’’ என்றார். அணையின் மதகு உடைந்ததற்குக் காரணமான அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!