வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (07/12/2017)

கடைசி தொடர்பு:08:51 (08/12/2017)

‘விவேகம்’ அஜித்தும் ப்ரெட் ஹார்ட்டும் - #WWE கிங்ஸ் ஆஃப் தி ரிங்ஸ் பகுதி 3

WWE

பகுதி 1 I பகுதி 2 I பகுதி 3

ருக்குள்ளே WWE-க்கு அவ்ளோ ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், அதற்கு விதை ‘ஆட்டிட்யூட் எரா’ போட்டது. ஆட்டிட்யூட் எரா என அழைக்கப்படும் 90'களின் இடைப்பட்ட காலம், WWE வரலாற்றின் மிகமிக முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது. அவை WWE-ன் அலுவலகம் அமைந்திருக்கும் கனெக்டிகட்டில் கல்வெட்டு அமைத்து பொறித்துவைக்கப்பட்டு, மழை பெய்யும் நேரத்தில் நனையாதவாறு குடைப் பிடித்து பத்திரமாக பார்த்துக்கொள்ளப்படவேண்டியது. ஸாரி பாஸ், நான் கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன்.

சரியாக ‘ஆட்டியூட் எரா’ இந்த நேரத்தில்தான் ஆரம்பித்ததென, எந்த நேரத்தையும் சொல்லி சூடம் அடித்து சத்தியம் செய்யமுடியாது. `விருமாண்டி எஃபெக்ட்' போல் ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொல்கிறார்கள். இருந்தாலும் `ஆட்டிட்யூட் எரா ஆரம்பித்தது அப்போதுதான்' என பெரும்பாலோனோர் குறிப்பிட்டுச் சொல்வது, 1997-ம் ஆண்டு நடந்த `மான்ட்ரியல் ஸ்க்ரூஜாப்' சம்பவத்தைதான். அது தரம்கெட்ட சம்பவம்தான், ஆனாலும் தரமான சம்பவம். நாலைஞ்சு இடியாப்பத்தை கொசகொசனு பிசைஞ்சு கையில் கொடுத்தாற்போல் குழப்பமாய் இருக்குமே? நேராக மேட்டருக்கே வருகிறேன்...

ப்ரெட் ஹார்ட்

‘ஹிட்மேன்' ப்ரெட்ஹார்ட், ப்ரோ ரெஸ்ட்லிங் உலகின் உத்தமவீரன். ப்ரொ ரெஸ்ட்லிங்கில் உள்ள அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத்தேர்ந்து ஸ்டேஜில் அரங்கேற்றி அசத்திய சூப்பர் ஸ்டார். திடீரென ஒரு ஆங்கிளில் பார்க்க `வெற்றிவிழா' கமல்ஹாசனைப் போல் தெரியும் இவருக்கு, ரசிகர் கூட்டம் எக்கசக்கம். அதாகப்பட்டது நாணயம்னா, இரண்டு பக்கம் இருக்கு. வாழ்க்கைனா இன்பம், துன்பம் இருக்கு. அந்தமாதிரிதான், வானம், பூமி, இரவு, பகல், நல்லது, கெட்டது. வாழ்க்கையோட அடியில் நோண்டிப் பார்த்தோம் என்றால் இப்படித்தான் எல்லாமே. அப்படி ப்ரெட் ஹார்டுக்கு இணையான இன்னொரு வீரனாக WWE--யை கலக்கிக் கொண்டிருந்தார் ஷான் மைக்கேல்ஸ். ஏற்கெனவே, ப்ரெட் ஹார்டுக்கும் ஷான் மைக்கேல்ஸுக்கும் இடையே சின்னச் சின்ன உரசல்கள் இருந்துவந்தன. இந்நிலையில், WWF-ன் போட்டி நிகழ்ச்சியான WCW-ல் இணைந்துகொள்ளச் சொல்லி ப்ரெட் ஹார்டுக்கு மில்லியன் டாலர் ஆஃபர் வர, அவரும் ஒப்புக்கொண்டார். இது WWF-ன் சேர்மன் மெக்மேஹனுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அப்போது சாம்பியனாக இருந்த ப்ரெட் ஹார்ட், சாம்பியனாகவே WCW-க்கு புலம் பெயர்ந்தால் WWF-க்கு பெருத்த அவமானமாகிவிடும் என எண்ணினார்.

"நீ WCW-க்கு போ. ஆனால், சாம்பியனாக போகாதே" என மெக்மேஹன் எவ்வளவோ கெஞ்சியும் ப்ரெட் ஹார்ட் கேட்டபாடில்லை. ஷான் மைக்கேல்ஸிடம் சாம்பியன்ஷிப்பை தோற்க அவர் விரும்பவில்லை. மெக்மேஹானும் வேறுவழியில்லாமல் ப்ரெட் ஹார்டிடம் `சரி. உன் இஷ்டபடியே நடக்கட்டும்' என ஒப்புக்கொண்டார். ஆனால், 1997-ம் ஆண்டு நடந்த `சர்வைவர் சீரிஸ்' சிறப்பு நிகழ்ச்சியில், சகுனியாக மாறி சதி ஒன்றை தீட்டினார் மெக்மேஹான். 

WWE

சண்டை நடந்துகொண்டிருக்கும்போது, ப்ரெட் ஹார்டுக்கு `ஷார்ப் ஷூட்டர்'* எனும் சப்மிஷன் லாக் மூவை நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஷான் மைக்கேல்ஸ். அப்போது ப்ரெட் ஹார்ட் சப்மிஷன் லாக்கை பிரிக்க போராடிக்கொண்டிருக்க, ரெஃபரியோ மணியை அடிக்கச் சொல்லி மேட்ச்சையே முடிக்க, அரங்கில் இருந்தவர்கள் அப்படியே ஷாக் ஆனார்கள். ப்ரெட் ஹார்ட் `கிவ் அப்' கொடுக்காமலேயே, `அவர் கிவ் அப் கொடுத்துவிட்டதாக' நடுவர் மேட்ச்சை முடித்தது, ப்ரெட் ஹார்ட்டுக்கு பெரும் கோவத்தைக் கிளப்பியது. சண்டையில் ஷான் மைக்கேல்ஸ் வென்றார் என அறிவித்து, சாம்பியன் ஷிப் பெல்ட்டையும் தூக்கிக் கொடுக்க, மெக்மேஹான் முகத்தில் காரி உமிழ்ந்தார் ப்ரெட் ஹார்ட். கிட்டதட்ட, `விவேகம்' படத்தில் வரும் அஜித்துக்கு நடந்ததைப் போல நம்பிய நண்பர்களே அவர் முதுகில் குத்தினார்கள்.

மான்ட்ரியல் எனும் இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் `மான்ட்ரியல் ஸ்க்ரூஜாப்' என ரெஸ்ட்லிங் ரசிகர்களால் அழைக்கப்படுகிறது. அதுவரை சாஃப்டாக சைடுவகிடு எடுத்து சரத்பாபு மாதிரி திரிந்துகொண்டிருந்த மெக்மேஹான், ஓவர் நைட்டில் மெயின் வில்லனாக மாறினார். அன்பான மெக்மேஹான், அதிகாரத்திமிர் கொண்ட மிஸ்டர்.மெக்மேஹானாக மாறினார். அவரோடு சேர்ந்து ஒட்டுமொத்த WWF-ம் மாறியது. ப்ரெட் ஹார்டின் இடத்தைப் பிடிக்கும் ரேஸில் பல இளம் திறமையாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் ஒருவர்தான் தி ராக். அடுத்த வாரம் அவரைப் பற்றியே பார்ப்போம்... ஆர் யூ ரெடி?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்