வெளியிடப்பட்ட நேரம்: 23:15 (07/12/2017)

கடைசி தொடர்பு:07:42 (08/12/2017)

சூடுபிடிக்கும் கே.ஆர்.பி. அணை ஷட்டர் உடைப்பு விவகாரம்! மேலும் 2 அதிகாரிகள் பணியிடைநீக்கம்

கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணையின் முதலாவது ஷட்டரில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து, அணையின் பாதுகாப்புக் கருதி மற்ற 7 ஷட்டர்களும் திறக்கப்பட்டன. இதன்மூலம் 1.10 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலந்தது. அணையின் நீர் மட்டம் 30 அடிக்குக் கீழ் சென்றதால், விவசாயிகளுக்கு இரண்டாம் போக சாகுபடிக்குத் தண்ணீர்  இன்றி அணை வறண்டது. அணை ஷட்டர் உடைப்புக்குக் காரணமாக இருந்த கே.ஆர்.பி. அணை செயற்பொறியாளர் பாலசுப்ரமணி ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி அணை பொறியாளர் சாம்ராஜ்

ஆனால், கே.ஆர்.பி. அணை ஷட்டர் உடைப்புக்கு ஊழல்தான் காரணம் என்று விவசாய சங்கங்கள், எதிர்க்கட்சியான தி.மு.க., பா.ம.க.  உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், பல்வேறு வகையிலான போராட்டங்களை நடத்தியும் அவர்கள் தமிழக அரசுக்குக்  கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர். பொதுப்பணித்துறையைக் கையில் வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகப்   பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கே.ஆர்.பி. அணையின் பொறியாளர் (எஸ்.டி.ஒ.) சாம்ராஜ் மற்றும் ஜெ.இ.கார்த்திகேயன் ஆகிய இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது. தற்போது கே.ஆர்.பி. அணைக்கு, ஓசூரை அடுத்துள்ள கெலவரபள்ளி   அணையின் பொறியாளர் குமாரைக் கூடுதலாகக் கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.