வெளியிடப்பட்ட நேரம்: 01:15 (08/12/2017)

கடைசி தொடர்பு:07:50 (08/12/2017)

“குமரியைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

எடப்பாடி பழனிசாமி 

“ ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைத் தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்” எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

கடந்த வாரம் வங்கக் கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. புயல் பாதித்த பகுதிகளைப் பல்வேறு அரசியல் கட்சியினரும் பார்வையிட்டு அந்தப் பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கன்னியாகுமரிக்குச் சென்று புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது... அவரிடம், ஒகி புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கைவைத்தனர்.  இந்நிலையில், ஒகி புயல் பாதிப்பை பேரிடராக அறிவிக்கக்கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். அதனை விசாரித்த நீதிமன்றம், புயலால் பாதித்த கன்னியாகுமரியைப் பேரிடர் பகுதியாக அறிவிப்பது பற்றி டிசம்பர் 20-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 

இதுதவிர, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும், கன்னியாகுமரியைப் பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்து வருகின்றனர். இந்த நிலையில், “ ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைத் தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்” எனத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைத் தேசியப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; புயல் பாதித்தப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பப் போதுமான நிதியுதவி வழங்க வேண்டும்; ‘ஒகி’  புயலால்,  குமரி மாவட்டத்தில்  மின் கட்டமைப்பு, விவசாயம், சாலைப் போக்குவரத்து போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன. அரேபியா, குஜராத், மாலத்தீவு பகுதிகளில் காணாமல்போன தமிழக மீனவர்களைத் தேடும் பணியைத் தொடரவேண்டும். இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க