வெளியிடப்பட்ட நேரம்: 00:05 (08/12/2017)

கடைசி தொடர்பு:07:55 (08/12/2017)

`தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியா, அல்லது ஆளுநரா?' - தினகரன் ட்விட்டரில் கேள்வி

கடந்த வாரம், கன்னியாகுமரியில் மையம்கொண்ட ஒகி புயல்,  அந்த மாவட்டத்தையே புரட்டிப்போட்டது. ஒகி புயலின்போது கடலுக்குச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். கடலில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்டு வரக்கோரி குமரியில் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில் இதுகுறித்து டி.டி.வி.தினகரன் கருத்து பதிவிட்டுள்ளார்.

தினகரன்

அதில், `ஒகி புயலில் காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடித்து காப்பாற்றுவதில், தமிழக அரசு மெத்தனம் காட்டுவதால்தான், இரவான பின்னும், ஆயிரக்கணக்கான மீனவர்கள் இன்னும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை என்ன என்பதிலேயே தமிழக அரசு தெளிவில்லாத ஒரு நிலையில் இருப்பது மிகுந்த வேதனையளிக்கும் ஒரு நிலை. மீனவர்களின் பிரச்னையை தலையாய பணியாகக் கருதி, அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசோடு இணக்கமாக செயல்படுவதாக பெருமைபட்டுக் கொள்ளும் தமிழக அரசு, அவர்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு, காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க தாமதமில்லாமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில முதல்வர் நேரில் சென்று, போராடும் மீனவ மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்குப் பதிலாக, மாநில ஆளுநர் சென்று மீனவர்களை சந்திக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியா, அல்லது ஆளுநரா? மீனவ மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு எடுக்காத காரணத்தால்தான் மீனவர்கள் மறியல் போராட்டத்தில் காலை முதல் ஈடுபட்டுவருகின்றனர். தமிழக முதல்வர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட வேண்டும். நடந்த துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்பதை உணர்ந்ததால்தான், உடனடியாக குமரிக்குச் சென்று பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் சொன்னேன். மீனவர்களின் இந்த துயரம் தீரும்வரை அவர்களது உணர்வுகளோடு நான் எப்போதும் கலந்திருப்பேன்' என்று தினகரன் தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.