பிரகாஷுக்கு நீதி... தகுதியுள்ள பேராசிரியர்கள்... உள்ளிருப்புப் போராட்டத்தில் அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள்!

சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர் பிரகாஷ் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி வேலூரில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணங்களை வீடியோ காட்சியாகவும், கடிதமாகவும் பதிவு செய்திருந்தார். சுடுமண் துறையில் இறுதியாண்டு படித்துவந்த பிரகாஷ், தன்னை துறைத்தலைவர் ரவிக்குமார் மற்றும் பேராசிரியர் சிவராஜ் ஆகியோர் மத ரீதியிலான பாகுபாடு காட்டுவதாகவும், பாடங்களை சரிவர நடத்துவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதனைப் பற்றி முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத கல்லூரி முதல்வர் மதியழகன் பற்றியும் கூறியிருந்தார்.

பிரகாஷ் மரணித்த நாள் முதல் அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றுவந்தது. எனவே, கல்லூரிக்கு ஒரு மாதம் விடுமுறை அளிக்கப்பட்டு, திங்கள்கிழமை முதல் வகுப்புகள் துவங்கப்பட்டன. எனினும் ’பிரகாஷ் தற்கொலைக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்து கல்லூரி மாணவர்கள் நேற்று மாலை முதல் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

போராட்டக் களத்தில் மாணவர்கள்

இந்தப் போராட்டத்தைப் பற்றி மாணவர் ஒருவர், ‘பிரகாஷ் மரணத்துக்கு நீதி வேண்டும் என்பது எங்களது முதன்மை கோரிக்கை. அந்த கோரிக்கையோடு, பேராசிரியர்களின் தகுதியைப் பரிசோதிக்க வேண்டியும், கல்லூரியில் ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒருங்கிணைக்கும் பணியைத் தொடங்க வேண்டும் என்பதையும் கோரிக்கையாக வைத்துள்ளோம். பிரகாஷ் போலவே, சில ஆண்டுகளுக்கு முன்பு சசிக்குமார் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இனியும் தற்கொலைகள் நிகழாமல் இருக்க இந்த கோரிக்கைகளை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்’ எனக் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!