`60% பேருந்துகள் வழித் தடங்களில் செல்ல முடியாத நிலையில் உள்ளது!' - குமுறும் போக்குவரத்து ஊழியர்கள்!

சேலம் நான்கு ரோடு ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனையில் ஊழியர்கள் கண்டன போராட்டம் நடத்தினார்கள். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் கலந்துகொண்டு பல கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.

இதுபற்றி போக்குவரத்து சங்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார், ''போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து 1.4.2003-க்குப் பிறகு சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.

60 சதவிகித அரசுப் பேருந்துகள் வழித்தடங்களில் செல்ல முடியாத நிலையில் உள்ளது என்று புள்ளி விவரங்கள் சொல்லப்படுகிறது. அந்த பேருந்துகளை ரத்து செய்துவிட்டு புதிய பேருந்துகளை வாங்கி பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை அரசு செய்து கொடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி ஓய்வூதிய தொகை கொடுத்துவிட வேண்டும். அனைத்து ஊழியர்களை போல ஓய்வு பெரும்போதே பிடித்தம் செய்யும் பணம் அனைத்தையும் வழங்க வேண்டும்.

பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதனால் அனைத்துப் பேருந்துகளுக்கும் இன்ஷூரன்ஸ் செய்ய வேண்டும். இன்ஷூரன்ஸ் செய்யாததால் பல கோடி இழப்பு ஏற்படுகிறது. பேருந்துகள் லாப நோக்கத்துக்கு மட்டுமல்லாமல் சேவையாகவும் இருப்பதால் 40 விழுக்காடு குழந்தைகள் பஸ் பாஸ், முதியவர்களுக்கான சலுகைகள் வழங்குவதால் அரசே வரவு செலவு தொகையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஊழியர்களுக்கு கட்ட வேண்டிய எல்.ஐ.சி. தொகையைக் கட்டாமல் இருப்பதால் ஊழியர்களுக்கு விபத்தில் அசம்பாவிதம் ஏதாவது நிகழ்ந்தால்கூட உரிய இழப்பீட்டுத் தொகையை கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவிவருகிறது. இதையெல்லாம் போக்குவரத்துத் துறை செய்ய வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!