வெளியிடப்பட்ட நேரம்: 06:15 (08/12/2017)

கடைசி தொடர்பு:18:04 (09/07/2018)

"பாலாவை கண்டித்து விஷால் தீர்மானம் நிறைவேற்றணும்!" - 'நாச்சியார்'-க்கு எதிராக அடுத்த குண்டு!

"தனது நாச்சியார் படத்தில், நடிகை ஜோதிகாவை ஆபாசமாக, பெண்குலத்தை இழிவுப்படுத்தின மாதிரி வசனம் பேச வைத்த இயக்குநரும், தயாரிப்பாளருமான பாலாமீது தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், வரும் பத்தாம் தேதி சென்னையில் நடக்கும் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றணும்!" என்று வெடித்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த 'தலித்' பாண்டியன்.

இந்தியக் குடியரசு கட்சியில் மாநில அமைப்பாளராக இருக்கும் இவர், இயக்குநர் பாலா மீதும், நடிகை ஜோதிகா மீதும் கரூர் ஜே.எம் 2 கோர்ட்டில் கடந்த மாதம் 27-ம் தேதி வழக்கு தொடர்ந்தார். அதாவது, 'நாச்சியார் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பாலா, நடிகை ஜோதிகாவை அந்தப் படத்தில் பெண்களை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகளை வைத்துள்ளார். அந்தக் காட்சிகளை நீக்குவதோடு, பாலா, ஜோதிகாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அந்த வழக்குப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை எடுத்துக்கொண்ட நீதிபதி பாக்கியம், கடந்த 29-ம் வழக்கை ஒத்திவைத்தார். அதை, தொடர்ந்து மறுபடியும் 27-ம் தேதி வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில், வரும் ஜனவரி பதினோறாம் தேதி இந்த வழக்கில் சாட்சிகளை ஆஜர்படுத்தும்படி குறிப்பிட்டு, வழக்கை ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.

'சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் 10-ம் தேதி நடக்கும் சினிமா தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் விஷால், பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக தனது படத்தில் ஆபாச வசனம் வைத்த பாலாவைக் கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்று அடுத்த குண்டை வீசி இருக்கிறார் 'தலித்' பாண்டியன்.

அவரிடமே பேசினோம். "பாலா தனது ஒவ்வொரு படத்திலும், இதுபோன்ற சர்ச்சை, அக்கப்போர்களைச் செய்யும் வசனங்களை வைத்து, தனது படத்துக்கு ஒரு ரூபாய்கூட செலவு செய்யாமல் விளம்பரம் தேடிக் கொள்கிறார். நாச்சியார் படத்தில் உச்சகட்டமாக பெண்களை இழிவுப்படுத்தும் விதமாக கேவலமான வசனத்தை அதுவும் ஒரு பெண் நடிகையை வைத்தே பேச வைத்திருப்பது கண்டிக்கத்தது. அதனால்தான், பாலா மீதும், நடிகை ஜோதிகா மீதும் கரூர் கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கிறேன். அதோடு, தன்னிச்சையாக தனது படத்தின் விளம்பரத்துக்காக ஒட்டுமொத்த பெண்குலத்தையே கேவலப்படுத்திய பாலாமீது வரும் 10-ம் தேதி சென்னையில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நடிகர் விஷாலுக்குப் பதிவுத் தபால் மூலம் தெரியப்படுத்தி இருக்கோம். அதன்பிறகு, சென்சார் போர்டில் மொத்தம் இருக்கும் பன்னிரண்டு உறுப்பினர்களில் நான்கு பேர் பெண்கள். கௌதமி, வித்யாபாலன், ஜீவிதா ராஜசேகர், இன்னொரு நடிகைன்னு நான்கு பேரும் பெண்கள். அதனால், இந்தப்  படம் தணிக்கைக்கு வரும்போது அந்தக் காட்சியையே இவர்கள் நீக்க நடவடிக்கை எடுக்கணும். அந்த வசனத்தை சைலண்டாக்கி, பீப் சவுண்டு வர்ற மாதிரி செய்றதோட விட்டுடக்கூடாது. அப்படி செய்யச் சொல்லி அந்த நான்கு பெண் உறுப்பினர்களுக்கும் புகார் அனுப்பப் போறேன். நீதிமன்றத்தில் இருக்கும் நீதிதேவதையும் பெண், நீதிபதியும் பெண், படத்தில் வசனம் பேசி இருப்பதும் பெண், சென்சார் போர்டில் உள்ள நான்கு உறுப்பினர்கள் பெண். இப்படி எல்லா பெண்களும் சேர்ந்து பெண்களுக்கு எதிராக பாலா படு ஆபாசமாக வைத்த வசனம் இடம்பெற்ற காட்சியை வெட்டி எறிய பாடுபடுவார்கள் என்று நம்புகிறேன்" என்றார் நெத்தியடியாக!