வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (08/12/2017)

கடைசி தொடர்பு:13:34 (10/07/2018)

"மழைநீர் சேமிப்பு தெரியும்... சாக்கடை நீர் சேமிப்பு தெரியுங்களா?" - பள்ளப்பட்டி மக்களின் 'வேதனை' கேள்வி!

 

"உங்களுக்கு மழைநீர் சேமிப்பு அமைப்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு. தனியாரும் பண்ணி இருப்பாங்க. அரசாங்கமும் பண்ணி இருப்பாங்க. ஆனால், சாக்கடை நீர் சேமிப்பு 'அமைப்பு' பற்றி உங்களுக்கு தெரியுங்களா? தெரியலன்னா பள்ளப்பட்டி வாங்க" என்று வேதனையாக குறிப்பிடுகிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் இருக்கிறது இந்த பள்ளப்பட்டி பேரூராட்சி. ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட இந்தப் பேரூராட்சி, தமிழ்நாட்டில் உள்ள பெரிய பேரூராட்சிகளில் ஒன்று. அதேபோல், மக்களுக்கு தொந்தரவு தரும் பிரச்னைகளும் இங்கே பெரிதாக இருக்கின்றன. அவற்றில் ஒரு ரகம்தான் 'இந்த சாக்கடை நீர் சேமிப்பு'. 'அது என்ன சாக்கடை நீர் சேமிப்பு?' என்று பள்ளப்பட்டி பேரூராட்சி வாழ் மக்களிடம் கேட்டோம். சாக்கடை நுரை போல பொங்கித் தீர்த்தார்கள்.
 

"எங்க பேரூராட்சியில அதிகம் வசிப்பது முஸ்லிம்கள்தான். வீடுகள் நெருக்கமாக இருக்கும். அதனால், ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் வெளியேறும் சாக்கடை வெளியேற சரியான அமைப்பே இல்லை. இதனால், சாக்கடை ஆங்காங்கே நடுரோட்டில் ஓடும். இதனால், இன்ன நோய்ன்னு இல்லாம சகல நோய்களும் எங்களுக்கு வரும். இதனால், சாக்கடை அமைப்பை சரி பண்ணி தாங்கன்னு பேரூராட்சி நிர்வாகத்துக்கு எதிராக பலகட்டப் போராட்டங்களை நடத்தினோம். அதன்விளைவாக, கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஒவ்வொரு வீட்டுக்கும் முன்னாடியும் சாக்கடை ஓட கால்வாய் வெட்டி, மேல சிமென்ட் சிலாப்புகளால் மூடினாங்க. அதுலதான், 6, 7-வது வார்டுகளில் 'சாக்கடை நீர் சேமிப்பு அமைப்பா' மாறிட்டு. முன்னாடியாச்சும், நடுரோட்டில் சாக்கடைநீர் ஓடினாலும், வீடுகளுக்கு முன் தேங்காமல் ஓடிரும். ஆனால், இப்போ அமைத்த அந்த அமைப்பு பல இடத்துல தாழ்வான ஓட்டமா கால்வாய் இல்லாம, மேடு, பள்ளம்ன்னு மாறி மாறி இருக்கு. இதனால், சாக்கடை நீர் அப்படியே வீடுகளுக்கு முன் உள்ள கால்வாயில் தேங்கி நிக்குது. இதுல, பல இடங்கள்ல இந்த சாக்கடை கால்வாயை மூடாமல் அப்படியே ஓப்பனா விட்டிருக்காங்க. ஆனால், அவற்றை 'மூடி'யதா கணக்கு எழுதி பல லட்சங்களை அதிகாரிகள் கொள்ளையடிச்சுட்டாங்க. இப்படி சாக்கடை நீர் ஓடாம நிற்பதால், கொசுக்கள் உற்பத்தியாகி வீடு முழுக்க ஃபேன்களை ஓடவிட்டாலும், உள்ளார வந்து எங்களை கடிச்சு, கண்ட நோய்களையும் பரப்பிவிட்டுட்டு போயிடுது. உடனே, இந்த சாக்கடை கால்வாயை சரிபண்ணி, தேங்கி நிற்கும் சாக்கடை நீர் ஓடும் அளவுக்குச் செய்யணும். இல்லைன்னா,போராட்டம்தான்!" என்றார்கள் ஆக்ரோஷமாக!