தொடர் போராட்டத்தில் முதுகலை மருத்துவ மாணவர்கள்: உடல் உறுப்புகளை தானம் செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்!

மருத்துவக்கல்லூரி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவர்கள் முறைகேடாக நடந்த மருத்துவத் தேர்வு, கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வை ரத்து செய்யக் கோரி 11-வது நாளாக தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒருவகையில் போராட்டத்தை நடத்திவரும் இவர்கள் நேற்று தங்களது உடல் உறுப்புகளைத் தானம் செய்து தொடர்ந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவத் துறையில் பல சமூகப் பணிகளை செய்துவரும் ஆர்.ஜே சிக்கந்தர்  கூறுகையில், "மருத்துவத்துறை என்பது ஒரு உன்னதமான துறை. மருத்துவப் படிப்பை காசு கொடுத்து வாங்காமல் அதிக மதிப்பெண்  எடுத்து கல்லூரியில் சேர்ந்து தங்களது கடின உழைப்பைச் செலுத்தி மறுபடியும் அரசு மருத்துவமனைகளில் சேவையைத் தொடரப் போகிறவர்கள்தான் இம்மாணவர்கள். கிராமப்புறத்தில் ஏழை எளியவர்களோடு உண்டு உறவாடி அவர்களுக்காக குறைந்தது இரண்டு ஆண்டுகள் மருத்துவ சேவை செய்து எந்த ஒரு பணமும் இல்லாமல் படித்து மருத்துவ மேற்படிப்பை தொடர்ந்தவர்கள் தற்போது போராடிவருகின்ற நபர்கள். அரசுக்காக சேவை புரியும் இவர்களின் இத்தனை ஆண்டு உழைப்பு அரசாங்கத்தாலேயே புறக்கணிக்கப்பட்டு வஞ்சிக்கப்படுவது வருத்தமளிக்கிறது' எனத் தெரிவித்தார்.

மேலும், போராட்டம்குறித்து முதுகலை மருத்துவ மாணவி நிஷா கூறுகையில், "முறைகேடாக நடந்த மருத்துவத் தேர்வை ரத்து செய்தல், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அரசு மருத்துவர்களுக்கு வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்னிறுத்தி 11-வது நாளாக எங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறோம். இதுவரை உள்ளிருப்புப் போராட்டம், மனிதச் சங்கிலி,  நீதிமணி, தூக்குப் போடும் போராட்டம் என பல வகையில் அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்துவரும் நாங்கள் உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திவருகிறோம். 60 முதுகலை மருத்துவ மாணவர்கள் கிட்னி, கண்கள், லிவர் என உடல் உறுப்புகளைத் தானம்  செஞ்சுருக்கோம். அரசு முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவர்களைப் புறக்கணித்துவிட்டு இதுவரை அரசுப் பணியில் இல்லாத தனியார் மருத்துவர்களை நியமிப்பது எங்களைப் போன்ற அரசு மருத்துவர்களுக்கு இழைக்கிற அநீதி. எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டத்தைக் கைவிடப் போறதில்லை' என்றார் தீர்க்கமாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!