வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (08/12/2017)

கடைசி தொடர்பு:07:45 (08/12/2017)

`கேரள அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்!' - ராமதாஸ் கோரிக்கை

"கி புயலில் சிக்கிய தமிழக மீனவர்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் கரை திரும்பாத நிலையில், அவர்களை மீட்க பினாமி தமிழக அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரிடர் காலத்தில் ஓர் அரசு எவ்வாறு செயல்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி அரசு திகழ்கிறது" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், `காணாமல் போன மீனவர்களை மீட்கும் விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது மட்டுமன்றி பொய்யான தகவல்களை வழங்கிவருவதாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்திய மீனவர்கள் கூறியுள்ளனர். அவர்களின் குற்றச்சாட்டுகள் புறந்தள்ளிவிடக் கூடியவை அல்ல. மீனவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களை ஆய்வுசெய்து பார்க்கும்போது, மீனவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க உண்மை என்பதை உணர முடிகிறது. ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? உயிரிழந்த மீனவர்கள் எத்தனை பேர்? என்ற விவரங்களைக்கூட தமிழக அரசு வெளியிட மறுக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து காணாமல் போன 294 மீனவர்களில், 220 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாகவும், மற்ற பகுதிகளிலிருந்து 284 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2,570 மீனவர்களில், இதுவரை 205 படகுகளும், அவற்றில் இருந்த 2,384 பேரும் மீட்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். மீதமுள்ள 79 படகுகளும் அவற்றில் உள்ள 186 மீனவர்களையும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்ற 74 மீனவர்களையும் மீட்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இதுவரை ஒரேயொரு மீனவரைக்கூட தமிழக அரசு மீட்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசு தெரிவித்துள்ள புள்ளிவிவரங்கள் பொய்யானவை ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் இன்னும் 1013 பேர் கரை திரும்பவில்லை என்று ஆதாரங்களுடன் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.

காணாமல் போன மீனவர்கள் எந்தெந்தப் பகுதிகளில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது உள்ளிட்ட விவரங்களையும் ஜி.பி.எஸ் கருவிமூலம் பெறப்பட்ட தகவல்களுடன் இணைத்து, தமிழக அரசிடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றின் உதவியுடன் மீனவர்களை அடையாளம் கண்டு மீட்க தமிழக அரசும், இந்திய கடலோரக் காவல்படையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக, தமிழக அரசு அதிகாரிகளிடம் மீனவர் சங்க பிரதிநிதிகள் புகார் அளித்தபோது, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் அதைச் செய்யாமல், ‘‘மீனவர்கள் பத்திரமாகத் திரும்ப வேண்டும் என்று ஜெபியுங்கள்’’ என்று கூறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மீனவர்களை மீட்க வேண்டிய அரசு அதன் கடமையைச் செய்யாமல், மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்படி பிரசங்கம் செய்வதா அரசின் பணி? என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

மக்கள் தவிப்பு

ஒகி புயலால் தமிழகம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதோ, அதைவிட அதிகமாக கேரள மாநிலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அங்கு மீட்புப்பணிகள் மின்னல் வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு, இயல்புநிலை திரும்பியிருக்கிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுவருகிறார். ஆனால், தமிழகத்தில் நிவாரணப் பணிகள் ஆமையைவிட குறைவாக வேகத்தில் நடந்துகொண்டிருக்கின்றன. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக ஆளுநரே ஆய்வுசெய்துவரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை. புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வுசெய்வதை விட ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரம் செய்வதுதான் முக்கியமா? என்பதை முதல்வர் விளக்க வேண்டும்.

கேரளத்தில் ஒகி புயலில் சிக்கி 30 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவியை ரூ.10 லட்சத்திலிருந்து, ரூ.20 லட்சமாக கேரள அரசு உயர்த்தியுள்ளது. காயமடைந்த மீனவர்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி, உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, சேதமடைந்த படகுகளுக்கு பதிலாக புதிய படகு என ஏராளமான சலுகைகளை கேரள அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் இதுவரை 36 மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இருவர் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறி ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 4 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை எவ்வாறு செய்வது? என்பதை கேரள அரசிடமிருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி, நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரளத்துக்கு இணையாக இழப்பீடு வழங்கவும், தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க