அரசு மருத்துவமனையின் பணத்தைக் கையாடல்செய்துவிட்டு தலைமறைவான ஊழியர்!

தேனி கானாவிலக்குப் பகுதியில் அமைந்துள்ளது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இங்கே, அலுவலக உதவியாளராகப் பணிபுரிபவர், அசோக். இவர், மருத்துவமனையின் பணத்தை கையாடல்செய்துவிட்டுத் தலைமறைவானதாக நமக்கு தகவல் கிடைத்தது. அதை உறுதிப்படுத்த மருத்துவமனை டீனை போனில் தொடர்புகொண்டு பேசினோம். “இப்போதைக்கு என்னால் எதையும் உறுதியாகக் கூற முடியாது. எவ்வளவு பணம் கையாடல் நடந்திருக்கிறது என்பதுபற்றி ஆய்வுசெய்துகொண்டிருக்கிறோம். அதன்பிறகு போலீஸில்  புகார் கொடுக்க இருக்கிறோம். அதன்பிறகு முழுத் தகவலும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்” என்றார்.

மருத்துவமனை ஊழியர்கள் சிலரிடம் விசாரித்தோம். “அசோக், வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம்கூட ஆகவில்லை. ஆனால், ஒரு கோடி ரூபாய் வரை கையாடல் செய்திருப்பதாகக் கூறுகிறார்கள். அவர், மருத்துவமனைக்கு அருகே பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டிவருகிறார். தனது அப்பா முனியசாமியின் வேலை, வாரிசு அடிப்படையில் அசோக்குக்குக் கிடைத்தது. வெளியில் நல்லவராகத்தான் இருந்தார். இப்படி ஒரு காரியம் செய்வார் என்று தெரியவில்லை. சில நாள்களாகவே மருத்துவமனைக்குச் சரியாக வருவதில்லை. வந்தாலும் வெளியில் வேலை என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவார். எவ்வளவு தொகையை கையாடல் செய்தார் என்று அதிகாலை முதல் அலுவலகத்தில் ஆய்வுசெய்துவருகிறார்கள். இனிமேல்தான் முழு விவரமும் தெரியவரும்” என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!