வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (08/12/2017)

கடைசி தொடர்பு:12:20 (08/12/2017)

`இரட்டை வாய்க்கால் முழுமையாக தூர் வாரப்படும்!’ - ஆட்சியர் உறுதி

     

கரூர் நகர மக்களுக்கு நீண்டநாள்கள் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தது கரூர் நகரின் குறுக்கால் ஓடும் இரட்டை வாய்க்கால் என்னும் கழிவுநீர் வாய்க்கால். ஆனால், இந்த வாய்க்கால் சில வருடங்களாக குப்பைகளால் தூர்ந்தும், சில தனியார் நபர்களால் ஆக்ரமிக்கப்பட்டும் இருந்தது.

இதனால், கழிவுநீர் வெளியேறாமல் அப்படியே நின்று, கரூர் மக்களுக்கு ஏகப்பட்ட நோய்களைக் கொடுத்துவந்தன. இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு இங்கு டெங்கு ஆய்வுக்கு வந்த கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜிடம், இந்த இரட்டை வாய்க்காலை தூர் வாரும்படி கோரிக்கை வைக்க, ஸ்பாட்டிலேயே நின்று அதிகாரிகளை வரவழைத்து அன்றே தூர் வாரச் செய்தார் ஆட்சியர். கரூர் மக்களின் பல வருட கோரிக்கை நிறைவேறியது. இரண்டு நாள்களுக்கு ஒருமுறை இரட்டை வாய்க்கால் தூர் வாரலை பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகிறார் ஆட்சியர். அந்த வகையில்தான், டெங்கு ஆய்வுக்குப் போன அவர், காமதேனு நகர் பகுதியில் இரட்டை வாய்க்காலை பார்வையிட்டதோடு, இந்தக் கழிவுநீர் வாய்க்கால் முழுமையாக தூர் வாரப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

கரூர் நகராட்சி வெங்கமேடு, இந்திராநகர், காமதேனு நகர், இராமகிருஷ்ணபுரம், திண்ணப்பா கார்னர், இரத்தினம் சாலைப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் டெங்கு தடுப்புப் பணிகளை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார், இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது,  "வெங்கமேடு, இந்திராநகர், காமதேனு நகர் பகுதில் இராமகிருஷ்ணபுரம், திண்ணப்பா கார்னர், இரத்தினம் சாலைப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுற்றுப்புற பகுதிகளைத் தூய்மையாக வைத்துகொள்ளவும், நிலத்தடி தண்ணீர் தொட்டிகள், நல்ல நீர் சேமிப்புப் பாத்திரங்களை நன்கு சுத்தம்செய்து மூடிவைக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நாள்தோறும் குப்பைகளை அகற்ற நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. காமதேனு நகர்ப் பகுதியில் உள்ள ரெட்டை வாய்க்காலில் கழிவு நீர் தடையின்றி செல்ல நகராட்சிப் பணியாளர்களுக்கு சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து முழுமையாக இந்த வாய்க்கால் கடைசிவரை தூர் வாரப்படும்!" என்றார்.