லட்சத்தீவுப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 180 தமிழக மீனவர்கள் மீட்பு! | 180 TN fishermen rescued from lakshadweep

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (08/12/2017)

கடைசி தொடர்பு:11:16 (08/12/2017)

லட்சத்தீவுப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 180 தமிழக மீனவர்கள் மீட்பு!

லட்சத்தீவுப் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 180 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Photo Credit: Twitter/IndianNavy


தமிழக தென்கடலோர மாவட்டமான கன்னியாகுமரியை ஒகி புயல் கடந்த 28-ம் தேதி தாக்கியது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன், கனமழை பெய்தது. மேலும், கடலில் சீற்றம் இருந்ததால், புயலுக்கு முன்னதாக  மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரைதிரும்ப முடியாமல் அவதியுற்றனர். அவர்களின் கதி என்னவென்றே தெரியாமல் இருந்தது. அவர்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படைக் கப்பல்களும், விமானங்களும் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றன. ஆபரேஷன் சகாயம் என்ற பெயரில் இந்தத் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 

காணாமல் போன மீனவர்களை உடனடியாக மீட்கக் கோரி, குமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு 8 கிராமங்களைச் சேர்ந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால், தமிழகம் - கேரளா இடையில் குமரி மாவட்டம் வழியான ரயில் சேவைகள் ஸ்தம்பித்தன. அரசின் உத்தரவாதத்தை ஏற்று நள்ளிரவில் மீனவர்கள் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. இந்தநிலையில், லட்சத் தீவுக் கடற்பகுதியில் 17 படகுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த 180 தமிழக மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்படையின் ஐ.என்.எஸ். கல்பேனி கப்பலால் மீட்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை கொச்சிக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள், விரைவில் தமிழகம் கொண்டுவரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


[X] Close

[X] Close