வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (08/12/2017)

கடைசி தொடர்பு:12:17 (08/12/2017)

போலீஸ் காவலிலிருந்து தப்பிய தஷ்வந்த்மீது மும்பை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு!

போலீஸ் காவலிலிருந்து தப்பிய தஷ்வந்த்மீது மும்பைக் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கடந்த பிப்ரவரியில் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்யவே, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுவிக்கப்பட்ட தஷ்வந்த், சென்னை மாங்காட்டை அடுத்த குன்றத்தூரில் குடும்பத்தினருடன் வசித்துவந்தார். குன்றத்தூர் வீட்டில் தாய் சரளாவைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தஷ்வந்த் கடந்த 2-ம் தேதி மாயமானார். 

தப்பிச் சென்ற தஷ்வந்த், மும்பையில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் உள்ளிட்ட தமிழக போலீஸார் மும்பை விரைந்தனர். விசாரணையில் மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை போலீஸார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சென்னை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் வரும் 9-ம் தேதி ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், தமிழகம் அழைத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் இருந்து விமானநிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய தஷ்வந்தைக் கைதுசெய்ய மும்பை போலீஸாரின் உதவியை தமிழக போலீஸார் நாடினர். மேலும், தஷ்வந்தைக் கைதுசெய்ய ஆய்வாளர் தலைமையில் மேலும் ஒரு தனிப்படை தமிழகத்தில் இருந்து மும்பை விரைந்துள்ளது. இந்தநிலையில், குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் அளித்த புகாரின் பேரில், தஷ்வந்த்மீது மும்பை வில்லிபார்லே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பியதாக அவர்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.