வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (08/12/2017)

கடைசி தொடர்பு:12:45 (08/12/2017)

மீண்டும் மிரட்டும் மழை! குற்றால அருவியில் குளிக்கத் தடை

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

வெள்ளப்பெருக்கு - குளிக்கத் தடை

இந்த ஆண்டு வட கிழக்குப் பருவமழை உரிய காலத்தில் பெய்ததால், நீர்நிலைகள் அனைத்திலும் தண்ணீர் வேகமாக உயர்ந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஒகி புயலின் காரணமாகக் கொட்டித்தீர்த்த மழையால், நெல்லை மாவட்டத்தின் 7 அணைகள் நிரம்பி விட்டன. மீதம் உள்ள 4 அணைகளும் நிரம்பும் நிலையில் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. 

143 அடி கொள்ளளவுகொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. 156 அடி கொண்ட சேர்வலாறு அணையில் 138 அடிக்கு தண்ணீர் உள்ளது. 118 அடி கொள்ளளவுகொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 112 அடியாக உள்ளது. அணைக்கு 408 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருப்பதால், அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது,. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக, பாபநாசம் அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 8 நாள்களாக இந்த அணையில் குளிக்க விதிக்கப்பட்ட தடை, இன்று 9-வது நாளாகத் தொடர்கிறது. 

குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால், அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மெயின்  அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் அதிகமாக தண்ணீர் கொட்டுகிறது. அதனால், பயணிகள் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.