வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (08/12/2017)

கடைசி தொடர்பு:16:50 (08/12/2017)

கழிவுநீரில் மிதக்கும் உழவர் சந்தை!

திருவாரூரில் பேருந்து நிலையம் அருகிலேயே அமைந்துள்ள உழவர் சந்தையின் நுழைவு வாயிலிலேயே கழிவுநீர் தேங்கியுள்ளது. சரியான பராமரிப்பு இல்லாததால் அருகில் உள்ள கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சந்தை முழுவதும் குப்பைக் கூழமாகச் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இந்த உழவர் சந்தையில் 50 கடைகள் உள்ளன, இருந்தும் நகராட்சி பராமரிப்பு இல்லாமல் சேரும் சகதியுமாக இருப்பதால் வெறும் ஐந்து கடைகள் மட்டுமே இயங்குகின்றன. இங்கு முன்பு கடை வைத்திருந்த பல விவசாயிகள் தற்போது சாலையோரத்தில் கடை வைத்துள்ளனர்.

உழவர் சந்தை

இது குறித்து சாலையோரம் கடை வைத்துள்ள முத்துகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது, ”நான் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி உழவர் சந்தையில் காய்கறி கடையும் பழக்கடையும் வச்சிருந்தேன் சார். அங்க நகராட்சி ஆளுங்க சரியான பராமரிப்பு பணியெல்லாம் பண்ணாததுனால மக்கள் யாருமே உழவர் சந்தைக்கு வந்து பொருள் வாங்குறது இல்லைங்க. சில கடைகளுக்கு சரியா மின்சார வசதியும் கிடையாது. இதனால நாங்களும் ரோட்ல கடைபோட்டு இருக்கோம். உழவர் சந்தையைச் சரி பண்ணித் தரச் சொல்லி பலமுறை கலெக்டர்கிட்ட மனு கொடுத்தாச்சு. பல கலெக்டர் மாறிட்டாங்க. ஆனா, எங்க நிலைமை மாறவே இல்ல.

திருவாரூர்

இந்த நிலைமையில 10 நாளைக்கு முன்னாடி நகராட்சியிலிருந்து அதிகாரிங்க வந்து ரோட்லலாம் கடை போடக் கூடாதுனு சொல்றாங்க. நாங்க என்னதாங்க பண்றது.

உழவர் சந்தைய சரி பண்ணி கொடுத்தா நாங்க ஏன் சார் ரோட்டுல கடை போடப்போறோம். என்ன மாறியே இங்க நிறைய பேர் பூக்கடை, பழக்கடை, கிழங்கு கடைனு உழவர் சந்தையில கடை வைச்சிருந்தவங்க எல்லாம் இப்ப ரோட்லதான் கடை வைச்சிருக்கோம் மழைக்காலத்துலதான் ரொம்பவே கஷ்டமா இருக்கும். பாதிநாள் வியாபாரம் பண்ணவே முடியாது. எங்க கஷ்டத்த யார்கிட்டதான் சொல்றதுனே தெரியலங்க.

ஏற்கெனவே விவசாயிகளெல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம். இந்த நிலைமையில விளையிற கொஞ்சப் பொருளையும் விக்கிறத்துக்குள்ள ரொம்பவே பாடுபடுறோம். இந்த உழவர் சந்தைய அதிகாரிங்க முயற்சி பண்ணி சரி பண்ணி குடுத்தா ரொம்பவே நல்லா இருக்கும்'' என்றார் பாவமாக.